மயிலாடுதுறை: பெண்கள் தங்களின் உரிமைகளைப் பெறவும், சமூக மாற்றத்தை முன்னெடுக்கவும் அதிகளவில் தேர்தல் அரசியலில் களம் காண வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பெண்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையில் ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த செளமியா அன்புமணி

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, சௌமியா அன்புமணி அப்பகுதி விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படாததால், கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் பாழாகி வருவதாகவும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும் விவசாயிகள் அவரிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், "2016-ஆம் ஆண்டு முதல் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்ததால் தான், காவிரி டெல்டா பகுதி 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அறிவிக்கப்பட்டது. ஆனால், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவெடுத்த பின்னரும், இங்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. மயிலாடுதுறை நகராட்சியில் நிலவும் பாதாளச் சாக்கடைப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

மது ஒழிப்பு மற்றும் தேர்தல் அரசியல்

பெண்கள் அரசியலுக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர் பின்வருமாறு பேசினார்:

* அரசியல் பங்களிப்பு: சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். பெண்கள் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் மட்டுமே, தங்கள் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் சுயசார்புடன் செய்து கொள்ள முடியும்.

* மது அரக்கன்: தமிழகத்தில் மது மற்றும் போதைப் பழக்கங்கள் இளைய தலைமுறையைச் சீரழித்து வருகின்றன. தற்போதைய ஆட்சியாளர்களால் மதுக்கடைகளை மூட முடியவில்லை. பாமக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகத்தில் மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும்.

* இலவசத் திட்டங்கள்: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அரசு, டாஸ்மாக் மூலம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு, அதில் ஒரு சிறு பகுதியை 'மகளிர் உரிமைத் தொகை' என்ற பெயரில் 1,000 ரூபாயாகக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கப் பார்க்கிறது. 100 நாள் வேலைத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் சாடினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, மாவட்டத் தலைவர் மணி, பொருளாளர் தையல்நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட இளம்பெண்கள் சங்கச் செயலாளர் வனிதா, மகளிர் சங்கச் செயலாளர் மணிமேகலை உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் செளமியா அன்புமணி பேச்சு கவனத்தை பெற்றுள்ளது.