உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த செருப்புத் தொழிலாளி, சொந்தமாக நிறுவனம் தொடங்க தயாராகி வருகிறார். தொழிலாளியின் இந்த உத்வேகத்திற்கு முக்கிய பங்காற்றியவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி. தொழிலாளிக்கு இயந்திரம் வாங்கி கொடுத்து அவரது வாழ்க்கையையே மாற்றியுள்ளார் ராகுல் காந்தி.

தொழிலாளியின் வாழ்க்கையை மாற்றிய ராகுல் காந்தி:

உத்தரப் பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர் செருப்புத் தொழிலாளி ராம்செட். அவதூறு வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு லக்னோ செல்லும் வழியில் சுல்தான்பூரில் உள்ள ஒரு ராம்செட்டின் கடைக்கு கடந்தாண்டு ராகுல் காந்தி சென்றிருந்தார்.

அங்கு, ராம்செட்டிடம் செருப்பு செய்ய கற்று கொண்டார் ராகுல் காந்தி. இதையடுத்து, டெல்லிக்கு தன்னுடைய வீட்டுக்கு வரும்படி ராம்செட்டுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று, கடந்த மாதம், டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள ராகுல் காந்தி வீட்டுக்கு சென்றார் ராம்செட்.

அங்கு, ராகுல் காந்தியின் தாயார் சோனியா காந்தி, அவரின் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தான் கையால் செய்த செருப்புகளை ராம்செட் வழங்கினார்.

உத்வேகம் அளித்த சந்திப்பு:

இதற்கு முன்பு, ராம்செட்டை விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து சென்ற ராகுல் காந்தி, பிரபலமான தோல் தொழிலதிபரும், வடிவமைப்பு பிராண்டான சமர் ஸ்டுடியோவின் நிறுவனருமான சுதீர் ராஜ்பரை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்தச் சந்திப்புதான், ராம்செட்டின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. 60 வயதான ராம்செட், செருப்பு தைக்கும் தொழிலில் இருந்து தொழில்முனைவோராக மாறுவதற்கு இந்த சந்திப்பு பெரும் உந்துதலை அளித்தது. இந்த பயணத்திற்குப் பிறகு, பெரும் கனவுடன் பாபுகஞ்சில் உள்ள தனது கடைக்குத் திரும்பினார் ராம்செட்.

இதற்கு முன்பு விமானத்தில் பயணம் செய்யாத ராம்செட், உலகம் முழுவதும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ராஜ்பாரின் பிசினஸால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இதுகுறித்து ராம்செட் கூறுகையில், "அங்கு நான் பைகள் மற்றும் செருப்புகளுக்கான புதுமையான வடிவமைப்புகளைப் பார்த்தேன்.

அவற்றில் பல மரம் மற்றும் ரப்பரை கொண்டு செய்யப்பட்டிருந்தன. நான் பர்ஸ்களையும் பார்த்தேன். இயந்திர அடிப்படையிலான வடிவமைப்புகளை செய்து பார்த்தேன். ராகுல் காந்தியும் சுதீர் ராஜ்பரும் எனது கைவினைத்திறனைப் பாராட்டினர். மேலும் எனது வேலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல என்னைத் தூண்டினர்" என்றார்.

ராம்செட் இப்போது தனது மகனுக்கு இந்தக் கைவினைப்பொருளை செய்ய கற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் 'ராம்சேட் மோச்சி' என்ற தனது சொந்த பிராண்டை நிறுவ முயற்சி செய்து வருகிறார்.