நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தெருநாய் விவகாரம் ஒரு சமூக பிரச்னையாக உருவெடுத்திருப்பதால் தெரு நாய் ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினரும் தங்களது கருத்துகளை முன்வைத்து விவாதம் செய்து வருகின்றனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதமும் சர்ச்சையாக மாறியது. தெருநாய்கள் பாவம் அது குழந்தைங்க அது என்ன செய்கிறது என்ற தொணியில் சீரியல் நடிகைகள் பேசியதை கண்டித்து நெட்டிசன்களும் அவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தெருநாய் பாவங்கள்

இந்நிலையில், தெருநாய்களை ஆதரிப்பவர்களையும், DOG Lovers என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் டீம் வெளியிட்டுள்ள வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் தங்களது பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பல சமூக கருத்துகள் நிறைந்த வீடியோக்களில் காமெடியாக கலாய்த்து பேசி மக்களுக்கு புரிய வைத்து வருகிறார்கள். அண்மையில், கவின் ஆணவக்கொலையை கண்டித்தும் ஆணவக்கொலையை ஆதரிப்பவர்களுக்கு எதிரான தங்களது கருத்தை பதிவு செய்திருந்தனர். அதேபோன்று தெருநாய் பாவங்கள் வீடியோவும் கவனத்தை பெற்றுள்ளது.

தெருநாய்களுக்கு ஆதரவாக போராட்டம் ஏன்?

தெருநாய்களை விளம்பரத்திற்காக ஆதரிப்பவர்களை கோபி சுதாகர் டீம் வெளுத்து வாங்கியுள்ளனர். சும்மா போகிற போக்கில் தெருநாய்களுக்கு ஆதரவாக சப்பைக்கட்டு கட்டக்கூடாது. அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிர்ப்பு குரல் மட்டுமே வருகிறது. போராட்டம் செய்வது முறையல்ல, நாய்க்கடியால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. நாய்க்கடியால் கர்ப்பிணி பெண் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் நிம்மதியாக இருசக்கர வாகனத்தில் செல்ல முடிகிறதா? மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது.

சென்னையில் 1.70 லட்சம் தெருநாய்கள்

சென்னையில் மட்டும் 1.70 லட்சம் தெருநாய்கள் இருக்கிறது என புள்ளி விவரத்தோடு சொல்கிறார்கள். போராட்டம் செய்யும் அனைவரும் வீட்டில் 1,000 நாய்களை எடுத்து சென்று வளர்த்தால் நன்றாக இருக்கும் என பல கேள்விகளை சுதாகர், கோபியும் எழுப்பியுள்ளனர். அதனோடு, தெருநாய்களை குழந்தைங்க என்று காமெடி பண்ணாதீங்க. எதற்கெடுத்தாலும் அரசை கேள்வி கேட்கும் நீங்க, தெருநாயை கட்டுப்படுத்த சரியான முடிவை சொல்லுங்க அதுவும் தெரியலைனா வாயை மூடிக்கொண்டு இருக்கவும் என்பது போல் தெருநாய் பாவங்கள் வீடியோவில் தெரிவித்துள்ளனர். இங்கு அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர, ஏழை எளிய மக்கள் தான். பணக்காரர்கள் இல்லை, பணக்காரர் வீட்டு பிள்ளையை தெருநாய் கடித்து காயமடைந்த செய்தி வந்திருக்கிறதா என பல கேள்விகளால் நாய் ஆதரவாளர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளனர். நாய்க்கு உணவு வைப்பது வன்முறை இது தெரியாமல் பாவம் என்று பார்த்து வைப்பதால் பல நோய் ஏற்படுகிறது எனவும் பேசியுள்ளனர். இதைப் பார்த்த பார்வையாளர்கள் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.