விழுப்புரம் அருகேயுள்ள எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதி தென்பென்ணை ஆற்று நீரில் நீர் நாய் ஒன்று துள்ளி விளையாடி மீனை பிடித்து உட்கொண்டு மகிழ்ந்த காட்சிகள் அனைகட்டு பகுதியில் இருந்தவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாத்தனூர் அணையில் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது. இதனால் சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தென்பெண்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம் அருகேயுள்ள ஏனாதிமங்கலம் எல்லிச்சத்திரம் அணைகட்டு பகுதியில் இருகரைகளையும் வெள்ள நீர் அர்பரித்து செல்கின்றன. வெள்ள நீர் செல்வதை கிராம பொதுமக்கள் பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் எல்லிச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் நீர் நாய் ஒன்று துள்ளி விளையாடு கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் நீரில் மூழ்கி மீனை பிடித்து உட்கொண்டது நீர் நாய் மீனை பிடித்து உட்கொண்ட காட்சிகள் அங்கிருந்தவர்களுக்கு விருந்தாக அமைந்தது.

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு - தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்

திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணை 113.05 அடியை எட்டியுள்ள நிலையில் நீர்வரத்து 5200 கன அடியாக உள்ளது. முன்னதாக, சாத்தனூர் அணைக்கு 7,000 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இது மேலும் அதிகரித்து, உபரி நீர் விநாடிக்கு 5200 கன அடியாக திறக்கப்பட்டது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது.

இதனால் வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. வானிலை அமைப்பு மாறியதால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.

தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.