சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தற்போது உள்ள நிலையை தொடர வேண்டும் எனவும், எந்த புனரமைப்பு பணிகளையும் 15 நாட்களுக்கு மேற்கொள்ளக்கூடாது என தடைவிதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற சார்பு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில். இக்கோயிலை சோழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும் நாயக்க மன்னர்களின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு பெரும்பாலான கோயில்களை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வந்துள்ளதை அடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலையும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தொடர்ந்து பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்துவரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் கடந்த 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் 2014 ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள், நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று தீர்பளித்தனர்.

அவ்வப்போது எழும் சர்ச்சைகள்

மேலும், முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரிசெய்ய கோயில் நிர்வாகத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார்வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கோயிலில் பல ஆண்டுகளாக தீட்சிதர்கள் தரப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருவதும், அவ்வப்போது தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகுவதும், தொடர்ந்து கதையாக இருந்து வரும் சூழலில், சுமார் 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி தீட்சிதர்களே கோயிலில் அனைத்தையும் நிர்வகித்து வருகின்றனர்.

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில்

இந்த சூழலில் நடராஜப் பெருமாள் கோயிலில் உள்ளேயே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்கு மேலாக தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் எவ்வித உற்சவம் நடைபெறாமல் இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கோயில் கொடிமரம் மாற்றம்

இந்நிலையில் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடிமரத்தை மாற்றும் பணியை இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நேற்று துவங்கியுள்ளனர். நேற்று மாலை அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றபோது அங்கு கூடிய நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கொடி மரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் கலைந்து போக செய்தனர்.

தீட்சிதர்கள் எதிர்ப்பு

அதனை தொடர்ந்து இன்று காலை கொடி மரத்தை மாற்றுவதற்காக கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சுப்பிரமணியன், உதவி ஆணையர் சந்திரன் தலைமையிலான குழுவினர் கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அதே நேரம் தீட்சிதர்களும் அப்பகுதியில் கூடி கொடிமரம் மற்றும் பணியை துவங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொடிமரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய படி மாற்ற தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தனர்.

எழுத்துப்பூர்வமான உறுதி

அதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் நகர காவல்துறையினர் தீட்சிதர்கள் மற்றும் பெருமாள் கோயில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் கோயில் கொடிமரத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே போல் புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பொது தீட்சிதர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, தங்களுக்கு எழுத்து பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் இருதரப்பினரிடையே இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையும் தோல்வியுற்றது.

கோயில் புனரமைப்பு பணிக்கு நீதிமன்றம் தடை

இந்நிலையில், தீட்சிதர்கள் சார்பில் சிதம்பரம் சார்பு நீதிமன்றங்களுக்கு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த சிதம்பரம் சார்பு நீதிமன்ற சார்பு நீதிபதி கார்த்திகேயன் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் தற்போது உள்ள நிலையை தொடர வேண்டும் எனவும், எந்த புனரமைப்பு பணிகளையும் செய்ய 15 நாட்களுக்கு மேற்கொள்ளக்கூடாது என தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் தடை உத்தரவு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பெருமாள் கோயில் அறங்காவலர் குழுவினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைவரும் கோயிலில் இருந்து வெளியேறினர். இதனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீடித்த பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.