உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்திருந்த பொது மக்களிடம் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ;

உங்களுடன் ஸ்டாலின் என்பது மகத்தான திட்டம். அதே போல நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மனித நேயம் காக்கும் திட்டமும் மிகப் பெரிய அளவில் மக்களை ஈர்த்துள்ளது. பத்தாயிரம் முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஜூலை மாதம் முதலமைச்சர் கைகளால் உங்களுடன் ஸ்டாலின் என்ற மகத்தான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நகர்ப் புறங்களில் 43 சேவைகளும் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் இந்த முகாம்கள் மூலமாக வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 3000 முகாம்கள் என திட்டமிடப்பட்டது அதன்படி 7427 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 55 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னையை பொருத்தவரை 326 முகாம்கள் நடத்தப்பட்டு 5 லட்சத்து 45 ஆயிரத்து 647 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன எனக் கூறிய மா.சுப்பிரமணியன் இன்றைக்கு ஒரே நாளில் மட்டும் 12 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன் ;

எடப்பாடி பழனிச்சாமி சொல்வது ஒன்று , செய்வது ஒன்று அவர் சொல்வதற்கும் செய்வதற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது. 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கை பொருளாதாரத்தை தமிழகம் அடைந்துள்ளது. இந்த மிகப் பெரிய சாதனையை முதலமைச்சர் செய்துள்ளார். இதையெல்லாம் அவர்களுக்கு பாராட்ட மனம் இருக்காது.

திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தமிழிசை கூறுகிறாரே என்ற கேள்விக்கு ,

தமிழிசை சௌந்தரராஜன் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக ஏதேதோ பேசி வருகிறார். மேலும் அவர் வெறுப்பு அரசியலை செய்து வருகிறார் என கூறினார்.

கோயம்புத்தூரில் நாய் கடி தொல்லை அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ;

நாய் கடிகளால் ஏற்படும் தொல்லைகள் குறித்து அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேலும் மக்கள் நல்வாழ்வு துறையை பொறுத்தவரை நாய்கடி , பாம்பு கடிக்கான மருந்து என்பது வட்டார அளவில் மாவட்ட அளவில் மருத்துவக் கல்லூரி அளவில் மட்டுமே இருந்ததை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அந்த மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கு பதிலளித்த அவர் ,

கூட்டணி குறித்தும் ஒரு கட்சியில் கூட்டாக இருப்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.