கர்நாடக மாநிலம், பெங்களூரு தலகட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா - வயது 20, இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இதேபோல் கோனனகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் வயது 25, ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகியுள்ளது

அஞ்சனா படிக்கும் கல்லூரியில் ஸ்ரீகாந்தும் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஸ்ரீகாந்துக்கும், அஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. தனக்கு ஏற்கனவே திருமணமானாலும், அஞ்சனாவை ஸ்ரீகாந்த் காதலித்து வந்துள்ளார். மேலும் இவர்களின் பழக்கம் தீவிரமானதாக சொல்லப்படுகிறது, இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறபடுகிறது. இந்த காதல் விவகாரம், அஞ்சனாவின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் அஞ்சனாவையும், ஸ்ரீகாந்தையும் கண்டித்துள்ளனர்.

மேலும் திருமணத்துக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் அவர்களை கண்டித்துள்ளனர்.

ஜோடி மாயம்

திருமணத்திற்கு தொடர்ந்து குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் மனமுடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அவர்கள் 2 பேரும் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த இரு குடும்பத்தினரும் அவர்களை பல இடங்களில் தேடினார்கள்.

ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக இருவீட்டாரும் தனித்தனியாக கோனனகுண்டே மற்றும் தலகட்டபுரா போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தலகட்டபுரா அருகே நைஸ் சாலையில் உள்ள ஏரிப்பகுதியில் கார் ஒன்று நின்றது. இதுபற்றி தலகட்டபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது காரில் 2 செல்போன்கள் கிடந்தது.

இதனை தீவிர விசாரணை மேற்க்கொண்டதில் அவை மாயமானதாக தேடப்பட்ட ஜோடி அஞ்சனா, ஸ்ரீகாந்த் ஆகியோரது செல்போன்கள் என்பது தெரியவந்தது.

ஜோடி தற்கொலை, சடலமாக மீட்பு

இதனால் அவர்கள் 2 பேரும், ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார், நீச்சல் வீரர்கள் உதவியுடன் 2 பேரையும் ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீச்சல் வீரர்கள் தீவிரமாக தேடினர், அப்போது ஏரியில் ஸ்ரீகாந்த், அஞ்சனாவின் உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், திருமணம் செய்து சேர்ந்து வாழ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீகாந்தும், அஞ்சனாவும் கயிற்றால் கைகளை கட்டி கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

தற்கொலை செய்வதற்கு முன்பு அஞ்சனா தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில், தங்கள் சாவுக்கு தாங்களே காரணம் என கூறி இருந்தார். இதுகுறித்து தலகட்டபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.