சிலிண்டர் தட்டுப்பாடு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போரபண்டா பகுதியைச் சேர்ந்தவர் முரளி வேணு, இவருக்கு சத்தியவதி என்பவருடன் திருமணமாகி ஐந்து மற்றும் இரண்டு வயதில் மகன் மற்றும் மகள் இருந்தனர். முரளி வேணு மின் துறையில் லைன்மேன் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்குள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் வீட்டிற்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், குளிப்பதற்காக கேஸ் அடுப்பில் சத்தியவதி வெந்நீர் வைத்துள்ளார். அதைப் பார்த்த கணவர் முரளி வேணு , சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் ஏன் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைக்கிறாய் ? என்று கேட்டுள்ளார். அதற்குப் பதில், மின்சார அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொள்ளக் கூடாதா ? என்று மனைவியைக் கண்டித்துள்ளார்.

வேலை இருக்கிறது - நீ போயிட்டு வா

அன்றைய தினம் திருமண நாள் என்பதால் கணவனுடன் பதிலுக்கு பதில் சண்டை போடுவதை சத்தியவதி தவிர்த்துள்ளார். மாறாக, இன்று தமது திருமண நாள் என்பதால், குழந்தைகளுடன் ஜாலியாக எங்கேயாவது வெளியே சென்று வரலாம் என கேட்டுள்ளார். அதற்கு தனக்கு வேலை இருக்கிறது , நீ வேண்டுமானால் போயிட்டு வா என்று கூறியுள்ளார். அதே வேளையில், முரளி வேணு அன்றைய தினம் , தனது தந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அவர் வீடு திரும்பியதும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தந்தையை அழைத்துச் செல்லும் உங்களுக்கு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாதா ? என்று கேட்டுள்ளார். அதையும் கணவன் அலட்சியம் செய்ததால், இனி இவருடன் சேர்ந்து வாழ்வதற்கு சாவதே மேல் என்று இளம்பெண் விபரீத முடிவு எடுத்துள்ளார். மனதை கல்லாக்கிக் கொண்டு தனது இரு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதில், 2 குழந்தைகளும் மூச்சுப் பேச்சின்றி கிடந்ததை அறிந்ததும் சத்தியவதி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சத்தியவதி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இரு குழந்தைகளையும் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்ததில் 5 வயது சிறுவன் ருத்ரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு வயது பெண் குழந்தை தன்விகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல் துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளி வேணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கணவன் - மனைவி சண்டையில் தான் இளம்பெண், தனது மகனை கொலை செய்து விட்டு விபரீத முடிவு எடுத்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.