தஞ்சாவூர்: ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் கிரிகுஜாம்பிகை - பிறையணி அம்மன் சமேத நாகநாதசாமி கோயில் உள்ளது. இக்கோயில் நவக்கிரகங்களில் ராகு தலமாக விளங்கி வருகிறது. இங்கு ராகு பகவான் தனி சன்னதியில் நாகவல்லி - நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பால் அபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இது ராகுப்பெயர்ச்சி விழாவாக நடைபெறுகிறது. இந்தாண்டு ராகு பெயர்ச்சி விழா கடந்த 24ம் தேதி கணபதி ஹோமம், முதல் கால பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ராகுபெயர்ச்சியான இன்று பிற்பகல் நான்காம் கால பூஜை நிறைவு பெற்று கடம் புறப்பாடும், அதனை தொடர்ந்து ராகு பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று மாலை 4:20 மணிக்கு, ராகுபகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலை 6 மணிக்கு ராகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடு நடந்தது. கடந்த 23ம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை வரும் 28ம் தேதி வரை நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயில் நவக்கிரகங்களில் ராகு பரிகார தலமாக விளங்குகிறது. பாடல் பெற்ற சிவத்தலங்களில் இக்கோயிலும் ஒன்று.

மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு பகவான். இவருக்கு சொந்த வீடு இல்லாததால் நின்ற இடத்தில் இருந்து தான் பார்க்கும் ராசிகளுக்கு பலத்தை தரக்கூடியவர். ராகு தி்சை என்பது 18 ஆண்டுகள் ஆகும். இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் தங்குவார். இவர் 12 ராசிகளை சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகின்றன.

ராகுவிற்கு உகந்த கிழமை, சனிக்கிழமை. இவருக்கு உரிய தானியம் உளுந்து. அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளிநாட்டு தொடர்புகளால் உயர்ந்த நிலைக்கு செல்லுதல், உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கை , புதுமையான விஷயங்களில் ஆர்வம் போன்றவற்றிற்கு காரணமாக அமைபவர் ராகு பகவான் தான். உடல்நல பாதிப்பு, எதிர்பாராத விபத்து, கணவன் -மனைவி கருத்து வேறுபாடு, அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ செலவுகள், பிள்ளைகளுக்கு தோஷம், அபராதம் கட்ட வேண்டிய நிலை, வயிறு தொடர்பான நோய்கள் ஆகியன ராகுவின் கெடு பலன்களால் ஏற்படுக் கூடிய விளைவுகளாகும்.