வீராப்பு திரைப்படத்தில் இடம்பெறும் திருடு போன டெம்போவை காவல்துறையினர் மீட்டு வந்தபோது டெம்போவின் ஸ்டீயரிங்கை காட்டி இதுதான் உன் வண்டி என காவல்துறையினர் கொடுப்பார்கள். அதைப்பார்த்து நடிகர் விவேக் அதிர்ச்சியடைவார். இப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

தனது இருசக்கர வாகனம் திருடு போனதாக வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டுவிட்டது என அவருக்கு காவல்துறையிடம் இருந்து தகவல் சென்றுள்ளது. மகிழ்ச்சியில் காவல் நிலையத்திற்கு சென்ற வாலிபருக்கு 'இந்தா உன் பைக்' என இருசக்கர வாகனத்தில் மட்கார்டை, காட்டி பெற்றுக்கொண்டேன் என எழுதிக்கொடு என காவல்துறையினர் கேட்டு வீராப்பு திரைப்படத்தில் வரும் காட்சியில் நடிகர் விவேக்கை அதிர்ச்சியடைய செய்ததை விட அந்த வாலிபரை காவல்துறையினர் அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அடுத்துள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (30). சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நிறுத்தியிருந்த வெங்கடேஸ்வரனின் இருசக்கர வாகனம் கடந்த 2023 ஆம் ஆண்டு திருடு போனது. இதுபற்றி அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடுபோன இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வெங்கடேஸ்வரன் தனது வண்டியை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல்நிலையத்திற்கு வண்டியை வாங்க அவர் வந்தார். அப்போது அவரிடம் இருசக்கர வாகனத்தில் இருந்த மட்கார்டு மற்றும் இன்ஜின் அருகேயுள்ள ஒரு பகுதியை மட்டும் காவல்துறையினர் கொடுத்து அதனை எடுத்துக் கொண்டு வண்டியை பெற்றுக் கொண்டதாக எழுதித் தருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் உரிமையாளர் வெங்கடேஸ்வரன் கடும் அதிர்ச்சியடைந்தார். இது எனது வண்டி இல்லை எனவும் வண்டிக்கு இன்ஜின், டயர் எதுவும் இல்லையா? எனவும் காவல்துறையினரிடம் கேட்டார். இதைத்தான் பறிமுதல் செய்தோம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதுபற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது, "கைது செய்யப்பட்டுள்ள நந்தகுமார் மீது ஏழு டூவீலர் திருட்டு வழக்கு உள்ளது. அவரை பிடிக்கும் போது இதனைத்தான் எங்களால் பறிமுதல் செய்ய முடிந்தது. அவர் வண்டியில் உள்ள பாகங்களை பிரித்து விற்பனை செய்து விட்டார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.

வெங்கடேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "டூவீலரை பறிமுதல் செய்து விட்டதாக வண்டியின் புகைப்படத்தை காட்டினர். இதனால் தான் டூவீலரை வாங்க வந்தேன். எனது வண்டியை பறிமுதல் செய்யவில்லை என கூறியிருக்கலாம். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பேன்" என்றார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடு போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உரிமையாளரை அழைத்து வாகனத்தின் இரண்டு பாகங்களை காவல்துறையினர் வாகன உரிமையாளரிடம் கொடுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.