ஊர்காவல் படையில் இணைந்து பணியாற்ற விருப்பும் வாலிபர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி திருச்சியில் இதற்காக தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் காவல் துறையினருக்கு உதவி செய்யும் செய்யும் வகையில் 1962-ம் ஆண்டு ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இருந்தும், அதற்கான ஆசை நிறைவேறாதபோது, பலர் ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்து வருகின்றனர். காவல் துறையினரை போலவே இவர்களுக்கும் தனிச் சீருடை வழங்கப்படுகிறது.

இதில், தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல் படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். காவல்துறைக்கு உண்டான அனைத்து தகுதிகளும் உடையவர்களே ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊர்க்காவல் படை வீரர்களை பொறுத்தவரை காவல் துறையுடன் இணைந்து ரோந்து செல்வது, போக்குவரத்தை சீர்செய்வது, விஐபி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, திருவிழா, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு காவலர்கள் போல் செயல்படும் ஊர்க்காவல் படையில் சேர வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. இந்நிலையில் இந்த ஊர்காவல் படையில் சேர வரும் அக்டோபர் 3-ம் தேதி திருச்சியில் இதற்காக தேர்வு நடத்தப்படுகிறது.

திருச்சி மாவட்டம், ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதில் ,சேர விருப்பமுள்ளவர்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், சுப்ரமணியபுரம், திருச்சி” என்ற முகவரிக்கு வரும் 22.09.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஊர்க்காவல் படை தேர்வு 03.10.2025 காலை 7 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது பூர்த்தியானவராகவும், 45 வயதிற்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடையவராகவும், நன்னடத்தை உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், திருச்சி மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பவராக இருத்தல் கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் தேர்வில் தளர்வு அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் உடன் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறலாம்.