திருச்சிராப்பள்ளி: திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5,000 வரை பரிசு வழங்கப்பட உள்ளது. இதில் அனைத்து பெண்களும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் வரும் 11ம் தேதி திருச்சியில் சிறப்பு மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களுக்கு டி-ஷர்ட், சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 'பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' (Beti Bachao Beti Padhao - BBBP) திட்டத்தின் கீழ், பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வரும் 11ம் தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

பெண்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் பாலின சமநிலையின் அவசியத்தை சமூகத்தில் வலியுறுத்தும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுவதாகவும், இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பெண்களுக்கு மட்டும் நடைபெறும் சிறப்பு மாரத்தான்

இந்த மாரத்தான் போட்டி பெண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. சமூகத்தில் பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களின் கல்வி உரிமை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை மற்றும் விளையாட்டு துறையின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து வயது பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பங்கேற்கணுமா... நேரடி பதிவு வசதி

மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் ஜூலை 11-ஆம் தேதி காலை 6.00 மணிக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய முடியாதவர்களும் நிகழ்ச்சி நடைபெறும் நாளிலேயே நேரில் வந்து பதிவு செய்து போட்டியில் பங்கேற்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் டி-ஷர்ட் மற்றும் சான்றிதழ்

மாரத்தானில் பங்கேற்கும் அனைத்து பெண்களுக்கும் நினைவுப் பரிசாக டி-ஷர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பெண்களை உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிப்பதோடு, சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் அதிகளவில் பங்கேற்கவும் ஊக்கப்படுத்தும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.

ரூ.5,000 வரை ரொக்கப் பரிசு

மாரத்தான் போட்டியில் வெற்றி பெறும் பெண்களுக்கு ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் பரிசு – ரூ.5,000
இரண்டாம் பரிசு – ரூ.3,000
மூன்றாம் பரிசு – ரூ.2,000

மேலும், 4-ஆம் இடம் முதல் 10-ஆம் இடம் வரை பெறும் 7 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்பார்கள் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மத்திய அரசின் 'பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்துவது, கல்வியை ஊக்குவிப்பது, பாலின பாகுபாட்டை குறைப்பது மற்றும் பெண்களின் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்வது போன்ற நோக்கங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே திருச்சியில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தகவல்களுக்கு... என்ன செய்யணும்?

மாரத்தான் போட்டி தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளியை 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

பெண்களின் உடல்நலம், கல்வி, சமத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.