பிரசவத்தின் போது, திருச்சி அரசு மகாத்மாக காந்தி நினைவு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்குமான இழப்பீடு 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்- அரசுத்தரப்பு

ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரசவத்துக்காக திருச்சி அரசு மகாத்மாக காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில் எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 20 லட்சம் இழப்பீடு கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.

எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தை தானமாக வழங்கியவரிடம் ரத்த தானம் செய்யப்பட்ட போது மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை. அந்த ரத்தத்தால் மனுதாரரும் அவரது குழந்தையும் எச்ஐவி தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ரத்தத்தில் 'விண்டோ பீரியட்' காலத்தில் இருக்கும் தொற்றுகளைக் கண்டறியும் அறிவியல் முறைகளோ அல்லது அமைப்போ இல்லை. இந்நிலையில் இழப்பீட்டு தொகையை தாமாக முன்வந்து உயர்த்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் பரதன், கூடுதல் அரசு வழக்கறிஞர் பார்த்தீபன் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மனுதாரருக்கும், அவரது குழந்தைக்கும் சேர்த்து மொத்தமாக 40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஏற்கெனவே வழங்கிய 2.50 லட்சம் போக மீதமுள்ள 37.50 லட்சத்தில் 17.50 லட்சத்தை 2 வாரத்திலும், 20 லட்சத்தை 4 வாரத்திலும் வழங்கவும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அவருக்கு உதவியவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டுகிறது எனக்குறிப்பிட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.