தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழா நாளை சனிக்கிழமை 3ம் தேதி மாலை தொடங்கவுள்ளது.

தியாகராஜ சுவாமிகள் (1767-1847) கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவர், சிறந்த இசை ஞானி, ஆன்மிகவாதி. இவர் ஸ்ரீ ராமனைப் போற்றித் தெலுங்கில் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றினார். இதில் குறிப்பாக பஞ்சரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்தவர். இவரது இசை, பக்தி மார்க்கத்தின் மூலம் தன்னிறைவை அடைவதை வலியுறுத்துகிறது, மேலும் அவரது படைப்புகள் இன்றும் கர்நாடக இசையின் மையமாகத் திகழ்கின்றன.

இவருக்குப் பல சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா திருவையாறில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது, இதில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைப்பார்கள்.

அந்த வகையில் இந்தாண்டு ஆராதனை விழா நாளை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருமாகாளாம் டி.எஸ். பாண்டியன், டி.எஸ். சேதுராமன் குழுவினரின் நாகசுர மங்கல இசையுடன் தொடங்குகிறது. இதையடுத்து, மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறார். ஆராதனை விழாவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் தொடங்கி வைக்கிறார்.

மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மாலை 6.40 மணிக்கு பெங்களூரு சகோதரர்கள் எம்.பி. ஹரிஹரன், எஸ். அசோக் பாட்டு, இரவு 7 மணிக்கு பிரபஞ்சம் ஆர். பாலச்சந்திரனின் புல்லாங்குழல், 7.20 மணிக்கு சிக்கில் சி. குருசரண் பாட்டு, 7.40 மணிக்கு தில்லி பி. சுந்தரராஜன் பாட்டு, 8 மணிக்கு காயத்ரி வெங்கடேசன் பாட்டு, 8.20 மணிக்கு சீர்காழி ஜி. சிவசிதம்பரம் பாட்டு, 8.40 மணிக்கு பாபநாசம் அசோக்ரமணி பாட்டு, 9 மணிக்கு மகேஸ்வரி வெங்கட்ராமன் வீணை, 11 மணிக்கு திருப்பதி வி. ஹரிபாபு, ஏ. சரத்பாபு நாகசுரம் ஆகிய இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே, அகில இந்திய வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படக்கூடிய தேசிய நிகழ்ச்சிகளான மஹதி பாட்டு இரவு 9.30 மணிக்கும், ஜெ.டி. ஜெயராஜ்கிருஷ்ணன், ஜெயஸ்ரீ ஜெயராஜ்கிருஷ்ணன் இரட்டையர் வீணை 10.15 மணிக்கும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, ஜனவரி 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி முடிய 60}க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். பின்னர், முக்கிய வைபவமான 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை ஆயிரத்துக்கும் அதிகமான இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் பங்கேற்று ஒருமித்த குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு முத்துப் பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.