திமுக-விற்கும் அதிமுக கூட்டணிக்கும் தான் நேரடிப் போட்டி!" - பழனியில் டிடிவி தினகரன் பேட்டி. "ஏற்கனவே இருப்பது பொம்மை முதல்வர் தான்" என ராகுல் காந்திக்குத் பதிலளித்த அவர், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது எடப்பாடி பழனிசாமி தான் என தெரிவித்தார்.

மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் பழனி வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் தேர்தல் களம் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிவகாசி விபத்து குறித்துப் பேசிய அவர், "விபத்துகள் நடந்தபோது நேரில் சென்று பார்த்த முதல்வர், அவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி அமைந்த பிறகு, இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார். மேலும், தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

நான்கு முனைப் போட்டி குறித்த கேள்விக்குப் பதிலளித்த தினகரன், "போட்டி என்பது ஆளும் மக்கள் விரோத திமுக கூட்டணிக்கும், எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தான். மற்ற கட்சிகள் தங்களை மாற்று எனச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்துவிட்டதால், எங்கள் கூட்டணிக்கு மற்ற புதிய கட்சிகளால் எந்தப் பாதிப்பும் இருக்காது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய அவர், "இது பிரதமர் மோடியின் மிகப்பெரிய முயற்சி. 33% இடஒதுக்கீடு மூலம் அதிகப் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்பதே அவரது எண்ணம். தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59-ஆக உயரப் போகிறது. இதை எதிர்ப்பது திமுக-விற்குத்தான் தோல்வி, பிரதமர் மோடிக்கு இது வெற்றி தான். 2029 தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உறுதியாகக் கிடைக்கும்" என்றார்.

கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் அதிமுக தோல்வியைத் தழுவியது குறித்த கேள்விக்கு, "அமமுக ஒன்பது ஆண்டுகளாகத் தேர்தல்களைச் சந்தித்து வரும் அனுபவமிக்க இயக்கம். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இப்போது ஓரணியில் இணைந்துவிட்டோம். எங்கள் அணிக்கும் திமுக-வுக்கும்தான் நேரடிப் போட்டி. புதிய கட்சிகளால் எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

எடப்பாடி பழனிசாமி குறித்துச் செங்கோட்டையன் பேசியதாகக் கூறப்படும் விமர்சனத்திற்குப் பதிலளித்த தினகரன், "அண்ணன் செங்கோட்டையன் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். 2017-ல் இபிஎஸ் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, அதற்கு முன்னால் அமைச்சராக இல்லாத செங்கோட்டையன் அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவியைக் கொடுத்தவர் இபிஎஸ் தான். இதைக் கொடுத்தவர் இபிஎஸ் தான் என்பதைத்தான் என்னால் சொல்ல முடியும் ராகுல் காந்தியின் 'பொம்மை முதல்வர்' விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே தமிழகத்தில் இருப்பது ஒரு பொம்மை முதல்வர் தான் என்று மக்களே பேசிக் கொள்கிறார்கள்" எனக்கூறினார்.