தஞ்சாவூர்: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என தஞ்சையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கருணாநிதி, மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாநில துணைச்செயலாளர் சிவ.சசிகுமார், மாநில இணைச்செயலாளர் கமல்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் செந்தில்குமார், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முகமதுவகிலன்சூர், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் -ஈரான் போரால் எரிபொருள் மற்றும் எரிவாயு பாதிப்பு ஏற்பட்டு தமிழகத்தில் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். எனவே போரை நிறுத்துவதற்கு ஐநா சபை உலக நாடுகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதோடு, தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க,.ஸ்டாலின் தலைமையிலான இந்திய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க, திமுக வெற்றி கூட்டணி வெற்றிக்கு தீவிரமாக பாடுபடுவது. அமெரிக்கா மற்றும் இந்திய வர்த்தக வரி ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும்.

திருச்சி அல்லது மதுரையை தமிழ்நாட்டின் இரண்டு தலைநகரமாக மாற்றி புதிய அரசு தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள தாமிரபரணி, காவிரி, மேட்டூர் அணை, கல்லணை, மதுரை வைகை ஆறு ஆகிய ஆறுகளை தூர் வார வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில் விவசாய பொருட்களை சந்தைகளில் விற்று வரும் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.

சட்டசபை தேர்தல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தீவிர பணி மேற்கொள்ள முதல்-அமைச்சரை நேரில் சந்திப்பது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கவும், அவருக்கு தஞ்சையின் மையப்பகுதியில் முழு உருவச்சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க அரசை கேட்டுக் கொள்கிறோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.