சென்னையில் இன்று சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான விதையை நாம் இன்று ஊன்றியிருக்கிறோம். ஒரு 24 மணி நேரத்திற்குள்ளாக, சென்னையில் இருக்கின்ற ஒட்டுமொத்த நிர்வாகிகளும் இங்கே ஒரே இடத்தில் திரள முடியும் என்றால், உலகத்திலேயே அது நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டும்தான் சாத்தியம்.

ஒரே ஒரு மெசேஜ்

மற்ற கட்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவர்கள் பத்து நாட்கள் வேலை செய்து, பத்து நாட்களாகத் திட்டமிட்டு, ஆட்களைப் பிடித்து, வண்டி வைத்து ஏற்றி வந்து அமர வைத்தால் கூட, அதில் 30 சதவீதத்தினர் கூட உருப்படியாகத் தேற மாட்டார்கள். ஆனால், இங்கே கூடியிருக்கும் இந்த எழுச்சிக்குக் காரணம் என்ன? ஒரே ஒரு போன் கால், ஒரே ஒரு மெசேஜ் - அதுவும் நம்முடைய தளபதி ஒருவருக்காக மட்டுமே இந்த கூட்டம் இங்கே கூடியிருக்கிறது. இந்த வைப்ரேஷன் என்பது வேறு எந்தக் கட்சியிலும் கிடையாது.

விலைக்கு வாங்கிவிடுவார்கள்

இத்தனை காலமும் சென்னை தங்களுக்கு ஒரு கோட்டை என்று திமுக சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் சென்னையில் வேறொரு சக்தியை வளரவிடாமல் தடுத்துக் கொண்டே இருந்தார்கள். சென்னையில் மாற்று அரசியல் செய்ய வருபவர்களை ஒன்று விலைக்கு வாங்கிவிடுவார்கள் அல்லது தங்கள் பக்கமே இழுத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தைக் குறைவாக மதிப்பிட்டுவிட்டார்கள். இவ்வளவு பேர், இத்தனை லட்சம் நிர்வாகிகள், இத்தனை ஆயிரம் கிளைகள் எப்படித் திடீரென உருவானார்கள் என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள். கட்சி அறிவித்த பத்தே நாட்களில் சென்னை முழுவதும் நமது நிர்வாகிகள் களத்தில் நின்றார்கள்.

கணக்குக் கேட்க முடியாது

உண்மையில், இந்த திமுக ஆட்சியில் சென்னை மக்கள்தான் மிகவும் பாவப்பட்ட மக்கள். சென்னைக்கு இவர்கள் உருப்படியாக எதுவுமே செய்யவில்லை. பூங்காக்கள் அமைக்கிறோம் என்று கணக்குக் காட்டுகிறார்கள். 500 கோடி, 1000 கோடி எனப் பூங்காக்களுக்கு ஒதுக்குவார்கள். ஏன் தெரியுமா? அடுத்த மழையில் அது அடித்துக்கொண்டு போய்விடும். பிறகு யாரும் கணக்குக் கேட்க முடியாது. இப்படித் தற்காலிகமான திட்டங்களை வைத்தே சென்னையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் வாழ்வாதாரத்தைப் பெருக்க ஏதேனும் செய்திருக்கிறார்களா? இல்லவே இல்லை. இருக்கின்ற வேலைவாய்ப்புகளையும் இவர்கள் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களாக இருக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், குறிப்பாக வியாசர்பாடி, வில்லிவாக்கம், பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் வாழும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். ‘குடிசை மாற்று வாரியம்’ என்கிற பெயரில் சென்னையின் மண்ணின் மைந்தர்களைச் சென்னையை விட்டு வெகுதூரம் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தோல்வி பயம் வரும்போது இவர்கள் கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள். காவல்துறையை வைத்து நம்மை ஒடுக்கப் பார்ப்பார்கள். வட சென்னை தொடங்கி ஒட்டுமொத்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இனி திமுக உள்ளே நுழையவே முடியாது. 1984 ஆம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி அவர்களைத் தவிர மற்ற அனைவரும் எப்படித் தோற்றுப் போனார்களோ, அதேபோன்ற ஒரு வரலாற்றுச் சரிவை 2026-ல் திமுக சந்திக்கப்போகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் வாரியத் திட்டம் என்று ஒன்று கொண்டு வந்தார்கள். முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டு, இந்த ஆட்சியிலும் அது தொடர்கிறது. 5000 கோடி ரூபாய்க்கு மேல் இதற்குச் செலவு செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் நிலைமை என்ன? ஒவ்வொரு மழைக்கும் மக்கள் தங்கள் கார்களைப் பாலங்களுக்கு மேல் கொண்டு போய் நிறுத்திவிட்டு, மூன்று நாட்கள் கழித்து வந்து எடுக்கிறார்கள். சென்ற முறை மக்கள் காரை அங்கே நிறுத்தக் கூட விடாமல் போலீசார் அடித்து விரட்டினார்கள். மக்களையும் இவர்களால் பாதுகாக்க முடியாது, மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைந்தாலும் இவர்களுக்குப் பொறுக்காது.

தமிழகத்திற்கே அழிவுதான்

திமுக ஆட்சி நீடித்தால் சென்னைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே அழிவுதான். சென்னை மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமானால், வேலைவாய்ப்புகள் பெருக வேண்டுமானால், சுகாதாரம் மேம்பட வேண்டுமானால், நம்முடைய தளபதி அவர்கள் 2026-ல் முதலமைச்சர் ஆக வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இல்லாத தெருவே சென்னையில் கிடையாது. ஒவ்வொரு தெருவிலும் டேபிள் போட்டு மக்கள் மத்தியில் நம்முடைய நிர்வாகிகள் நின்றார்கள். இவ்வளவு பெரிய மக்கள் செல்வாக்கு வேறு எவருக்கும் கிடையாது. நீங்கள் மக்கள் முன்னால் செல்லும்போது, இந்த ஆட்சியின் அவலங்களைத் தெளிவாகச் சொல்லுங்கள்.

சென்னையின் ஒவ்வொரு வார்டிலும் இருக்கும் கவுன்சிலர்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு மேலாகச் சம்பாதித்துவிட்டார்கள். உங்கள் பகுதியில் இருக்கும் கவுன்சிலரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் மக்களைச் சந்திப்பதே இல்லை. ஆனால் கொள்ளையடிப்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

நம்முடைய கட்சியை ஆரம்பத்தில் ஏளனம் செய்தார்கள். விக்ரவாண்டி மாநாட்டில் எவ்வளவு பேர் வருவார்கள் என்று வேடிக்கை பார்த்தார்கள். காசு கொடுக்காமல், சாப்பாடு போடாமல் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே திரண்டது இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மக்களுக்காக உழைக்கப் போகும் ஒரு தலைவர் வந்துவிட்டார் என்பதை இந்தியா உணர்ந்து கொண்டது.

இன்று சென்னை எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் போதை கலாச்சாரம். எங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. உயர் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நள்ளிரவு 12 மணிக்கு மதுவும், போதைப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. இதையெல்லாம் காவல்துறையால் தடுக்க முடியும், ஆனால் மேலிடத்திற்குச் செல்லும் ‘கமிஷன்’ அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது. நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்தப் போதை அரக்கனை நாம் ஒழிக்க வேண்டும் என தெரிவித்தார்.