கோவில் திருவிழாக்களில் மட்டுமல்லாமல், விசேஷ வீடுகள் மற்றும் விசேஷங்கள் கொண்டாடக்கூடிய மண்டபங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் திருவிழாக்களில், விருந்துகள் வைப்பது ஏராளமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, கறி விருந்து நடப்பது என்றால் சொல்லவா வேண்டும். அப்படி திருவிழா என்றாலே, குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களில் கறி விருந்துடன் படையல் வைக்கப்படுவதும், அதில் போட்டி போட்டுக் கொண்டு கோவில் பிரசாதங்களை வாங்கக்கூடிய பக்தர்களும், மக்களும் கூடிய திருவிழாக்கள் பல உள்ளன.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள கோட்டை கருப்பணசாமி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பிரம்மாண்ட கறி விருந்து விடிய விடியப் பரிமாறப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள கோட்டை கருப்பணசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாகும். இங்கு தலைமுறை தலைமுறையாகக் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரியத் திருவிழா, இந்த ஆண்டும் வழக்கமான ஆன்மீக உற்சாகத்துடன் தொடங்கியது. சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டன. இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக இந்த ஆடுகளைக் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.

பலியிடப்பட்ட ஆடுகளின் கறியைக் கொண்டு, அங்கேயே பிரம்மாண்ட அண்டாக்களில் பாரம்பரிய முறைப்படி சுடச்சுட கறிக்குழம்பு மற்றும் சாதம் சமைக்கப்பட்டது. விடிய விடிய நடைபெற்ற இந்த சமையல் பணியிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட கறி விருந்து பரிமாறலிலும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து இந்த அசைவப் பிரசாத உணவை ஆர்வத்துடன் சாப்பிட்டனர்.

இந்த திருவிழாவின் மிக முக்கிய கட்டுப்பாடு என்னவென்றால், இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த தனித்துவமான வழிபாட்டு முறையில் கலந்துகொள்ள திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கறி விருந்தை உற்றார் உறவினர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.பல நூற்றாண்டுகளாக தங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மாறாமல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தருமத்துப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா, இப்பகுதியில் ஆன்மீக நெகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தியுள்ளது