விழுப்புரம்: திண்டிவனம் அருகே மொளசூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிலையும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பல்லவர் கால கொற்றவை, மூத்ததேவி சிலைகள் கண்டெடுக்கப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மொளசூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிலையும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது.

சிற்பத்தின் மேல் வலதுபுறத்தில் மானும் இடதுபுறத்தில் சிம்மமும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மான், சிங்கம் இரண்டுமே கொற்றவையின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிற்பத்தின் வலது கீழ்ப்பகுதியில் தனது தலையைத் தானே அரிந்து கொண்டு பலி கொடுக்கும் வீரன் அமர்ந்து இருக்கிறான்.

இடது பக்கத்தில் வழிபாடு செய்யும் அடியவர் அமர்ந்து இருக்கிறார். பல்லவர் கலைப்பாணிக்குச் சிறந்த உதாரணமாக திகழும் இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டு ஆகும். மொளசூர் ஏரியில் புதைந்த நிலையில் மற்றொரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. மேலும் இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் மற்றும் ஐயனார் சிற்பமும் இவ்வூரில் அமைந்துள்ளன. பல்லவர் காலத்தில் மொளசூர் கிராமம் சிறப்பான வழிபாட்டில் இருந்துள்ளது.

கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமர்ந்த நிலையில் மூத்ததேவி

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆலகால ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. சுமார் 3 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கனத்த மார்புகள் சரிந்த வயிற்றுடன் தலையலங்காரம், காதணிகள் கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமர்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். அவளது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் சிறிய அளவிலான செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.

கொற்றவை, மூத்ததேவி வழிபாடு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது

மூத்ததேவியின் இரண்டு பக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் அமர்ந்து இருக்கின்றனர். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கைக் கொடியும், அவளது ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பம் பல்லவர் காலத்தின் இறுதியில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம். காளி என உள்ளூர் மக்கள் வணங்கி வருகின்றனர்.

மேலும் மானசா தேவி என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பெயருக்கும் மூத்ததேவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொற்றவை, மூத்ததேவி வழிபாடு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது என்பதற்கு மொளசூர், ஆலம்பூண்டி சிற்பங்கள் உதாரணமாகத் திகழ்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.