நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, அவர்களுக்கு நவீன தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், தாட்கோ (TAHDCO) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து வழங்கவுள்ள சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்பப் பயிற்சிக்கு (Solar Panel Installation Technician Training) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது வளர்ந்து வரும் எரிசக்தித் துறையான சூரிய ஆற்றல் (Solar Energy) துறையில் இளைஞர்களை வல்லுநர்களாக்க இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சிக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

இப்பயிற்சியில் இணைந்து பயன்பெற விரும்புவோர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்:

*இனப்பிரிவு: விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

*வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

* கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma), பொறியியல் பட்டதாரிகள் (B.E/B.Tech) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

*வருமான வரம்பு: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/- (மூன்று இலட்சம் ரூபாய்) மிகாமல் இருக்க வேண்டும்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள் மற்றும் வேலைவாய்ப்பு

இந்தத் தொழில்நுட்பப் பயிற்சியானது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது:

* பயிற்சி காலம்: 45 நாட்கள் தீவிர செய்முறை மற்றும் தத்துவ ரீதியான பயிற்சிகள் வழங்கப்படும்.

*இலவச வசதிகள்: இப்பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவுச் செலவுகள் அனைத்தையும் டாக்டர் ரெட்டி நிறுவனம் முழுமையாக ஏற்கும். மாணவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

*அங்கீகாரம்: பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

*ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு: பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ. 18,000 முதல் ரூ. 30,000 வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

சுயதொழில் தொடங்க அரிய வாய்ப்பு

வேலைவாய்ப்பினைத் தேடிச் செல்ல விரும்பாமல், தாங்களாகவே சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கும் இத்திட்டம் கைகொடுக்கிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழிலைத் தொடங்க விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் மூலதனத்தைப் பெற தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வேலை வழங்கும் தொழில் முனைவோராகவும் மாற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.comஎன்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலதிக விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு

முகவரி: மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 321 மற்றும் 327, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம்.

"நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சமூகப் பொருளாதாரத் தற்சார்பு அடைய முடியும். எனவே, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திப் பயனடைய வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.