அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் 3 எம்.எல்.ஏ.,க்கள் இணைந்த நிலையில் இதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிமுக டூ தவெக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். இதேபோல் பெருந்துறையில் ஜெயக்குமாரும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றனர். இவர் கடந்த மே 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தேர்தலில் வென்று 21 நாட்களே ஆன நிலையில் இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் கையோடு தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக ஆதரவு கட்சிகள் கோபம்

இந்த நிலையில் அதிமுகவில் எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் தவெகவில் இணைந்தது கூட்டணிக்குள் புகைச்சலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விசிக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அதிமுகவில் வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்த 3 MLAக்களின் செயல் அறமற்றது. அவர்களை வரவேற்பது ஆபத்தானது. இது தவெகவின் உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவார்கள் என்ற கூற்றுக்கு ஒரு தெளிவான, சந்தேகத்திற்கிடமற்ற அச்சுறுத்தலாகும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி வெங்கடேசன், “காங்கிரஸ் தவெகவுக்கு பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்ற நிபந்தனை இருந்தது. அந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் வென்ற 3 எம்எல்ஏக்களை இணைத்திருப்பதற்கான காரணம் என்ன? இது குறித்து தவெக தெளிவுபடுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தலைமை கவனத்திற்கு வைக்கிறேன் என ராகுல்காந்தியையும் டேக் செய்துள்ளார்.

அவரது பதிவை யாரோ விமர்சித்து ஸ்ரீநிதிக்கு, “நீங்கள் எதற்கு தவெகவுக்கு எதிராக பதிவிடுகிறீர்கள். இப்போதைக்கு அமைதியாக இருங்கள். நாம் எப்போதும் கொள்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நாம் என்ன சாதித்துவிட்டோம். இப்போதைக்கு ஒரு வாரியத் தலைவரையோ அல்லது அரசாங்கத்தில் ஏதேனும் ஒரு உறுப்பினரையோ பெற முயற்சி செய்யுங்கள்” என தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஸ்ரீநிதி, “இப்படி தான் பலரும் அமைதி காத்து கொண்டு இருக்கிறார்கள் போல .
எனக்கு ஆதாயம் தான் வேண்டும் என்றால் 2021 ல் மத்திலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியில் சேர்ந்துஇருக்கலாம். இப்படி சூழலிலும் எப்படி காங்கிரஸ்க்கு ஓவாத தேசிய ஜனநாயக கூட்டணியை முன்னாள் mla ஏற்க கூடாது என்று சொன்னது குத்தமா?” என தெரிவித்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கும்?

ஆனால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் 3 எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் கட்சியில் இணைந்துள்ளார்கள். இதில் குதிரைபேரம் நடக்கவில்லை என தெரிவித்தார். தற்போது திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளது. அடுத்த 6 மாதத்தில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.