தஞ்சாவூர்: முன்னாள் மேயர் பற்றி தவறான கருத்தை கூறிய அதிமுக பெண் கவுன்சிலரை திமுக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டதால் தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) அஞ்சுகம்பூபதி தலைமையில் ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, எம்எல்ஏ விஜய்சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

கேசவன்: கடந்த 6 மாதமாக எந்த பணியும் சீராக நடைபெறவில்லை. ஆங்காங்கே பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது.

செந்தமிழ்ச்செல்வன்: 40 ஆண்டுகாலமாக தூர்வாராமல் இருந்த வெண்ணாற்றங்கரை பகுதியில் எம்.பி., முரசொலி முயற்சியால் தூர்வாரியதற்கு நன்றி தெரவித்துக்கொள்கிறேன்.

ஐயப்பன்: புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் வார்டுகளுக்கு வரும் போது கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. கரந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு மாத்திரைகளை கவரில் வைத்து தருவதில்லை. கேட்டால் மரியாதை குறைவாக பேசுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஜய்பாபு: 7-வது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை சரி செய்து தர வேண்டும். பாதாள சாக்கடைப்பணிகளை நிறைவேற்ற டெண்டர் வைக்க வேண்டும்.

ரேவதி: எனது வார்டில் நடந்துள்ள சாலைப்பணிகளில் ஒரு பணி மட்டும் விடுப்பட்டுள்ளது. அதை முடித்து தர வேண்டும். சாக்கடைகளை தூர்வார வேண்டும். குரங்கு தொல்லை அதிகம் உள்ளது. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி: இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்னஸ்மேரி: எனது வார்டு பகுதியில் கழிவறை வசதி இல்லை. பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆனந்த் (தி.மு.க.):- மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்த பத்திரம் இன்னும் வரவில்லை. எனவே ஆய்வு செய்து உடனடியாக வாடகை ஒப்பந்தபத்திரம் வழங்க வேண்டும். மீன்மார்க்கெட்டால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெகுவாக அவதியடைந்து வருகின்றனர். புதிய மீன்மார்க்கெட் எப்போது திறக்கக்கூடும். பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை இலவசமாக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

செந்தில்குமாரி: வரலாற்று சிறப்பு மிக்க அழகிக்குளத்தை தூர்வாரப்பட்டதற்கு மேயருக்கும், அழகி குளம் அருகே புதிதாக ரேஷன்கடை கட்டித்தந்த முன்னாள் எம்.எல்.ஏ. நீலமேகத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பாலசுப்பிரமணியன்: எனது வார்டில் உள்ள சிறிய குறைகளை நிவர்த்தி செய்து தரவேண்டும். ஆணையரை பார்க்க சென்றால் வெகுநேரம் காத்திருக்க வைக்கின்றனர். ஆணையர் வார்டுக்கு வருவது குறித்து எங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தட்சிணாமூர்த்தி: 25-வது வார்டுக்குட்பட்ட 18 தெருக்களிலும் பேவர் பிளாக் சீரமைக்கும் பணிக்காக பணி ஆர்டர் வழங்கப்பட்டு இன்று வரை அந்த பணி நடைபெறவில்லை அதை விரைவு படுத்த வேண்டும்.

டெய்சிராணி: முனிசிபல் காலனியில் உள்ள நீலகிரி மாநகராடசி உயர்நிலைப்பள்ளிக்கு சமையலறை, சாப்பாட்டுக்கூடம், வாகன நிறுத்துமிடம், மேற்கூரை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பணிகளுக்கு ரூ.26 லட்சம் ஒப்புதல் அளித்த மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜெய்சதீஷ்: எனது வார்டில் ரேஷன்கடை சிறிய சந்தில் வாடகை கட்டித்தில் இயங்குகிறது. சின்னஆஸ்பத்திரி பகுதியில் மாநகராட்சி கட்டிடம் உள்ளது. அங்கு செயல்பட அல்லது, அந்த பகுதியில் புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்திமதி: அரண்மனை எதிரே உள்ள மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக செய்ய வேண்டும். அரண்மனைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். எனவே இந்த மழைநீர் வடிகாலை உடன் சீரமைக்க வேண்டும.

இதே போல் கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் கண்ணுக்கினியாள், சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் பாதாள சாக்கடை பிரச்சினையால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேயர் (பொ) அஞ்சுகம்பூபதி: ஒவ்வொரு வார்டுக்கும் நானும், ஆணையரும் நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை சரி செய்து வருகிறோம். கூட்டத்தில் தெரிவித்த கவுன்சிலர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

எம்.பி., முரசொலி பேசுகையில், கடந்த தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து ரூ.3.25 கோடியில் தூர்வாரும் பணி உள்ளிட்டவற்றுக்காக 7 ஜே.சி.பி. எந்திரம் வாங்கப்பட்டு, அதன் மூலம் முதல் கட்டமாக அகழி சுத்தப்படுத்தப்படுத்தப்பட்டது. மத்திய அரசு மூலம் பெரியகோவிலை சுற்றி நடைபாதை, பார்க்கிங் வசதி உள்ளிட்வை மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி பெறப்பட்டு அந்த பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. தஞ்சை திருவள்ளுவர் வணிக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

எம்எல்ஏ., விஜய்சரவணன் பேசுகையில், தமிழக முதல்வராக பொறுப்பெற்ற விஜய், நிர்வாகம் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். நான் சென்ற இடங்களில் எல்லாம் பாதாள சாக்கடை பிரச்சினை தொடர்பாக புகார்களை மக்கள் அதிக அளவில் தெரிவித்தனர். இங்கு பேசிய கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு ஏற்ப 5-வது வார்டு மற்றும் பா.ஜனதா கவுன்சிலர் ஜெய்சதீஷ் வார்டில் எனது தொகுதி நிதியில் இருந்து ரேஷன்கடை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்றார்.

அதிமுக கவுன்சிலரை முற்றுகையிட்ட திமுகவினர்

மாநகராட்சி கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் காந்திமதி எழுந்து பேசினார். அப்போது அவர், தஞ்சை முன்னாள் மேயர் சண்.ராமநாதன் மாநகராட்சியில் எந்த பணியையும் சரியாக செய்யவிலை என்பதற்குத்தான் சட்டமன்ற தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை கொடுத்து உள்ளனர் என்றார்.

இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. தி.மு.க. கவுன்சிலர்கள் காந்திமதியை சூழந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காந்திமதியை சுற்றி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாதுகாப்பு அரணாக நின்றனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தி.மு.க. கவுன்சிலர் அண்ணாபிரகாஷ் எழுந்து, அ.தி.மு.க. கவுன்சிலர் காந்திமதி பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றார். இந்த கருத்தை மற்ற தி.மு.க. கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். தங்கள் இருக்கைகளில் அமராமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டே இருந்தனர்.

மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி கவுன்சிலர்களை அமைதியாக இருக்க கூறியும் அதிமுக கவுன்சிலர் காந்திமதி தான் கூறியதை திரும்ப பெற வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.