திருப்புவனம் லாக்கப் மரணம் விவகாரத்தில் போலீசார் கொடூரமாக நடந்து கொண்டதன் பின்னணியில் தலைமைச் செயலக அதிகாரி ஒருவரின் அழுத்தம் இருந்ததாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யார் அந்த சார்? யார் அந்த தம்பி? ஆகியவற்றை தொடர்ந்து தற்போது யார் அந்த அதிகாரி என்ற கேள்வி எழுந்துள்ளது.

காவலர்கள் காட்டுமிராண்டிகளா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணை என்ற பெயரில் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அஜித்குமாரை திருப்புவனம் கோவிலில் உள்ள கோசாலையில் வைத்து காவலர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகளும் நேற்று வெளியாகி காவலர்கள் காட்டுமிராண்டிகள் போல் நடந்து கொள்ள யார் உரிமை கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்தது.

இதனிடையே நீதிமன்றமும், ’’மாநில அரசே தன்னுடைய குடிமகனை கொலைசெய்துள்ளது. நகை காணாமல் போன வழக்கில் போலீஸார் ஏன் FIR பதியவில்லை? யாரைக் காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது?, யாருடைய உத்தரவின்பேரில் விசாரணை சிறப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது?’’ என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.

பின்னணி என்ன?

இதனிடையே திருப்புவனம் விவகாரத்தில் இந்த விசாரணை கொடூரமாக மாறியதற்கு பின்னணியில் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் இருப்பதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அவர் கொடுத்த அழுத்தம்தான் இந்த விவகாரம் இவ்வளவு கொடூரமாக மாறியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

திருப்புவனம் விவகாரத்தில் புகார்தாரரான நிகிதா, தலைமைச் செயல அதிகாரி ஒருவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி விசாரணையை தீவிரப்படுத்தச் சொன்னதாகவும், அந்த அதிகாரி சிவகங்கை எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தை தொடர்பு கொண்டு உத்தரவிட, உடனே எஸ்.பி. மானாமதுரை டிஎஸ்பியிடம் பேச அவர் FIR- கூடப் போடாமல் ஸ்பெஷல் டீமை விசாரிக்க உத்தரவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்துதான் இந்த லாக்கப் மரணம் நடைபெற்றதகவும் தகவல் வெளியகியுள்ளது.

யார் அந்த அதிகாரி?

இந்த நிலையில்தான் அண்ணாபல்கலை மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பியது பின்னர், டாஸ்மாக் முறைகேட்டில் யார் அந்த தம்பி என்ற கேள்வியும் எழுந்த நிலையில், தற்போது ’’யார் அந்த அதிகாரி?’’ என்ற பிரச்சாரத்தை தீவிரப்படுத்த எதிர்க் கட்சிகள் திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.