Maharashtra Crime: மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குலை நடுங்கச் செய்யும் கொலை

கேட்போரை கதி கலங்கச் செய்யும் விதமாக மனைவியை கொன்று, அவரது உடலை 17 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய நபரை மகாராஷ்ட்ராவின் பிவந்தி பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். 25 முதல் 28 வயதுடைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை, ஆகஸ்ட் 30 ஆம் தேதி இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சி கூடம் பகுதிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த கோர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கில் தாஹா என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் அவர் தொடர்ந்து முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொலைக்கான உண்மையான காரணத்தை உடனடியாகக் கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாக தெரிகிறது.

17 துண்டுகளாக வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம்

விசாரணையின் போது, தாஹா தனது மனைவி பர்வீனைக் கொன்றதாகவும், அவரது உடல் பாகங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடலை 17 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியாதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளாராம். இதையடுத்து மீதமுள்ள உடல் பாகங்களை மீட்க அதிகாரிகள் விரிவான தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இதில் ட்ரோன்கள் மற்றும் தீயணைப்புப் படை குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டது எப்படி?

பர்வீனின் தாயார் ஹனிபா கான் தனது மகள் காணாமல் போனதாக புகார் அளித்ததை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தனது மகளின் தொலைபேசி இரண்டு நாட்களாக அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மருமகனுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் காவல்துறையினரால் மீட்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலையின் புகைப்படத்தை ஹனிஃபாவிடம் காண்பிக்கப்பட்டுள்ளது. அது தனது மகளுடையது என்று அவரும் அடையாளம் காட்டியுள்ளார். பின்னர் தலை பரிசோதனைக்காக இந்திரா காந்தி துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கொலை நடந்த இடம் அல்லது தலை துண்டிக்கப்பட்ட செயல்முறை பற்றிய விவரங்களை வெளியிட மறுத்த காவல்துறை, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் தேடி வருகின்றனர்.

கொலைக்கான காரணம் என்ன?

குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, துணை காவல் ஆணையர் மற்றும் உதவி காவல் ஆணையர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இரண்டு சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறுதான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று அக்கம்பக்கத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாகவும், இதுபோன்ற ஒரு சண்டையின் போதுதான் அந்த நபர் தனது மனைவியைக் கொன்றிருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.