தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் நவம்பரில் டிஎன்பிஎஸ்சி மூலம் நவம்பரில் தேர்வு நடக்கிறது. அதை பற்றிய முழு விபரங்கள் உங்களுக்காக!!!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 400 உதவி பொறியாளர் மற்றும் 1,850 கள உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

மொத்தம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை பெறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு பல்வேறு துறையில் இருக்கும் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில், மின் வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஐடிஐ தகுதிக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இந்தாண்டு இரண்டாம் முறை நடத்தப்பட உள்ளது.

இப்பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக பிசி, எம்பிசி பிரிவினர் 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வரையும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 44/47 வரை தளர்வு உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் 55 வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு 37 வரையும் தளர்வு உள்ளது. இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபடியான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரீஷியன் அல்லது வையர்மேன் அல்லது சிறப்பு திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக்கல் தொழிற்பிரிவு ஆகிய ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ்/ தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இதே பாடப்பிரிவுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

கள உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊதியத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிலை 2 கீழ் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - II ஒரு கட்ட தேர்வாக நடத்தப்படும். இரண்டு தாள்கள் கொண்டு நடைபெறும். இதில் தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஒரு தாளாகவும், பாடப்பிரிவு ஒரு தாளாகவும் இடம்பெறும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு தேர்வு கணினி வழியில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினர் 195 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழ் தாளில் 60 மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும். இதர பிரிவினர் மொத்தம் 240 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இத்தேர்வு கொள்குறி வகையில் அமையும். கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.

முதல் தாள் 10-ம் வகுப்பு தரத்திலும், இரண்டாம் தாள் ஐடிஐ தகுதி தரத்தில் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதித் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்சில் தேர்ச்சி பெறுபவர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடும் பின்பற்றப்பட்டு, மூலசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.