வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் உள்ள சிறு , குறு வியாபாரிகளிடம் கோரிக்கைகளை கேட்கும் பணியில் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர். அவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் ;

வடசென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கம் , சென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களுக்காக மக்களிடம் இருந்து என்பதற்கு ஏற்ப பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டியவை குறித்து அவர்கள் இடத்திற்கே சென்று கோரிக்கைகளை கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கு அடுத்து காஞ்சிபுரம் நெசவாளர்கள் சந்தித்து கேட்க உள்ளோம்.

பீகாரிகள் குறித்து அப்படி பேசக் கூடாது

எந்தக் கடையிலும் பீஹாரி என அழைக்கப்படும் சகோதரர்கள் கடலை மிட்டாய் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வட இந்தியா தென்னிந்தியா என்ற பாகுபாடு யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அமைச்சர்கள் பீகாரிகள் டேபிள் துடைக்கத் தான் தமிழகத்திற்கு வருகிறார்கள் என்று பேசுகிறார்கள் அப்படி பேசக் கூடாது. வந்தவர்களை நிர்பந்தனை செய்யக் கூடாது வந்தவர்களை வாழ வைத்து தான் தமிழகத்திற்கு பழக்கம்.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டி வரியை பொருத்தவரைக்கும் நேரடியாக மத்திய அரசு விதிப்பது கிடையாது. இங்கு இருக்கக் கூடிய மாநில அரசு கொடுக்கக் கூடிய பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பேக்கிங் செய்வதற்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி உள்ளது அதை குறைக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் நிச்சயமாக மத்திய அரசிடம் கொண்டு செல்வோம். ஜி.எஸ்.டி யை பொருத்தவரைக்கும் அந்த 18 சதவீதத்தில் இருந்து சரியான பங்கு மாநில அரசுக்கு வருகிறது மாநில அரசு வளர்ச்சி அடைந்து உள்ளது என்றால் ஜி.எஸ்.டி - ன் பங்கு முக்கிய பங்காற்றுகிறது என்பதை குறிப்பிடுகிறேன்.

நாடாளுமன்றத் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை ;

பிரதமர் யாரைக் கண்டும் பயப்படவில்லை ஏன் பாகிஸ்தானை கண்டு பயப்படாதவர் நம்முடைய பிரதமர். எதிர்க் கட்சிகளின் நடவடிக்கை மனதிற்கு வேதனையாக உள்ளது. அங்கு இருக்கக் கூடிய சபாநாயகர் இங்க இருக்கக் கூடிய அண்ணன் அப்பாவு போல் இல்லை. எதுவாக இருந்தாலும் தெள்ளத் தெளிவாக பார்த்து கூறக் கூடியவர். ஆனால் இங்கு இருக்கக் கூடிய அண்ணன் அப்பாவு ஆளுநர் வரும் போது மைக்கை ஆப் செய்பவர் , அப்படிப்பட்டவர் அல்ல நாடாளுமன்றத்தில் இருக்கும் சபாநாயகர்.

தொடர்ந்து கமலஹாசன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை,

அவர் கட்சி தொடங்கிய உடனேயே நான் ஒன்றை குறிப்பிட்டேன் அவர் பேசும் மொழிக்கு கோனார் உரை தான் தேவைப்படும் என்று தெரிவித்தேன். அவர் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார் எந்த மொழியில் பேசினார் என்பதே விளங்கவில்லை.

அதே நேரத்தில் பெரியார் சொல்லியதை தான் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால் அதைக் கூட தெரியாமல் கமலஹாசன் தமிழ் பிச்சை வாங்கும் மொழி இல்லை என்று பெரியாருக்கு தான் பதில் சொல்லியுள்ளார். அதைக் கூட தெரியாத இங்குள்ள பெரியார் பக்தர்கள் கைதட்டி சூப்பர் என்று ரசிக்கிறார்கள்.

அதே போல யாரும் ஆட்சி அதிகாரத்தில் அதிக நாட்கள் இருக்க முடியாது என கமலஹாசன் கூறுகிறார். யாரை கூறுகிறார் 2026 சட்டமன்றத் தேர்தல் இங்கு தான் நடைபெற உள்ளது.

திமுக மன்னிக்க முடியாத பல தவறுகளை செய்வார்கள் அதிலும் கமலஹாசனை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது திமுக செய்த மிகப் பெரிய தவறு. சினிமாவில் டயலாக் பேசிக் கொண்டு இருந்தவர் தற்பொழுது பாராளுமன்றத்தில் என்னவென்றே தெரியாமல் தவறாக டயலாக்குகளை பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் தமிழ்நாடு தலைகுனிந்து கொண்டிருக்கிறது என்றார்.