தஞ்சாவூர்: குடும்பத் தகராறில் மாமனாரை கடத்திச் சென்று தெலுங்கானா மாநிலத்தில் வைத்து கொலை செய்த மருமகனை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் (65). இவரது மூத்த மகள் ராகினி (35). இவர் தஞ்சையில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஓட்டலுக்கு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அரவிந்த்ராவ் (42) என்பவர் வந்து தங்கிச் செல்வது வழக்கம். அப்போது அரவிந்த்ராவுக்கும், ராகினிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.

இருப்பினும் ராகினி குடும்பத்தாருக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் அரவிந்த் ராவ் மீது ராகினி குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில் அடிக்கடி மாமனார் குடும்பத்துடன் அரவிந்த் ராவ் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரவிந்தராவ் ராகினியின் தங்கச்சி புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராகினியின் தங்கை போலீசில் புகார் செய்தார். மேலும் அர்விந்த்ராவ் மீது அவரது மாமியாரும் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அடிக்கடி அரவிந்த்ராவ் மிரட்டி வந்துள்ளார். ஆனால் மாமனார் உட்பட குடும்பத்தினர் வழக்கை வாபஸ் பெறவில்லை.

தனது மாமனாரை கடத்தி சென்று மிரட்டினால் வழக்கை வாபஸ் வாங்கி விடுவார்கள் என்று நினைத்த அரவிந்த்ராவ் கடந்த டிசம்பர் 19.12.2024ல் சாலியமங்கலம் வந்து தனது மாமனார் சேகரை தெலுங்கானா மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கேயே தனது மாமனாரை கொலை செய்தும் உள்ளார். இதுகுறித்து சேகரின் குடும்பத்தினர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்ராவை தேடி வந்தனர். ஏற்கனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை வழக்கில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அரவிந்த்ராவ் நெடுவாசல் விஏஓ விவேக் முன்பு சரணடைந்தார்.

பின்னர் விஏஓ விவேக் அம்மாப்பேட்டை போலீசில் அரவிந்த்ராவை ஒப்படைத்தார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார் அரவிந்த்ராவ்வை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.