மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் காரில் வந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், விபத்து நடந்த சில நிமிடங்களில் காரில் இருந்த தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அவசர அவசரமாக அப்புறப்படுத்தி விட்டு மாற்று காரில் தப்பிச் சென்றதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய கார்

பூம்புகாரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிய பிரதான சாலையில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த கார் கீழையூர் பகுதியை கடந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் மின்கம்பம் இரண்டு துண்டுகளாக உடைந்து கீழே சரிந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மதுபோதையில் இருந்த வாலிபர்கள் மற்றும் கொடி அகற்றம்

காரில் இருந்த நபர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்ட நிலையில், அவர்களுக்கு நல்வாய்ப்பாக சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இருப்பினும், காரில் இருந்தவர்கள் அனைவரும் கடுமையான மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, விபத்து நடந்ததை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்கள் செல்போனில் இச்சம்பவத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள், வீடியோ எடுத்த இளைஞருக்கு மிரட்டல் விடுத்ததுடன், காரின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடியை அவசர அவசரமாக கழற்றி அப்புறப்படுத்தினர்.

விசாரணை இன்றி தப்பிச் சென்ற காரோட்டிகள்

சம்பவம் குறித்து பொதுமக்கள் உடனடியாக செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வருவதற்குள், விபத்துக்குள்ளான காரில் இருந்த வாலிபர்கள் தங்களது உடைமைகளை விரைவாக எடுத்துக்கொண்டனர். பின்னர், உடனடியாக தங்களது நண்பர்களுக்கு போன் செய்து மற்றொரு காரை அவ்விடத்திற்கு வரவழைத்து, அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் பதிவு எண் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது (UP) எனத் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் கேள்வி

இந்த விபத்து குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் இதுவரை எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்று காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைப்பதற்கு தேவையான பணத்தை, விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களே மின்வாரிய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இருப்பினும், உத்தரபிரதேச மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரில் வந்து விபத்து ஏற்படுத்தியவர்கள் யார், அவர்கள் எந்த நோக்கத்தில் நள்ளிரவில் அதிவேகமாக வந்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டதும், வீடியோ எடுத்த இளைஞருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதும், எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவர்கள் தப்பியோட அனுமதிக்கப்பட்டதும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.