அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் கடல் உணவு பொருட்களின் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து உள்ளது. தூத்துக்குடியில் உள்ள 15 நிறுவனங்கள் உள்பட தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 25 நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு கடல் உணவுகளை அனுப்பும் நிலையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது முதலில் விதித்த 25 சதவீத வரி கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இந்த வரி தற்போது அமலாகியது. இவ்வாறு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், எந்திர தயாரிப்பு, கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இறால், கணவாய், பனாமின் போன்ற கடல் உணவுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கடல் உணவுகளை அமெரிக்கா பாதிவழியில் தடுத்து நிறுத்தியது. இதனால் தமிழகத்தில் கடல் உணவு ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சுங்க முகவர்கள் கூறியதாவது, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் அவர்கள் இந்திய பொருட்களை வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு மாதம்தோறும் சுமார் 1,000 முதல் 1,500 சரக்கு பெட்டகங்கள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த சரக்கு பெட்டகங்களில் திருப்பூர், கரூர், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய ரெடிமேடு ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், கடல் உணவுகள், முந்திரி பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்டவை அடங்கும்.

அமெரிக்கா வரிவிதிப்பு காரணமாக, இந்த வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதியாகும் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதன்மூலம் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக்கான மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்படும். ஏற்றுமதியாளர்கள், சுங்க முகவர்கள், ஷிப்பிங் நிறுவன ஊழியர்கள், போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இந்த சூழ்நிலையில் இருந்து, ஏற்றுமதியாளர்கள் சுங்க முகவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.