தஞ்சாவூா்: உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும் அளவிற்கு நவராத்திரி விழா நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடும். ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி, பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் மிக சிறந்த விழா என்பதும் குறிப்பிடத்தக்கது. நவராத்திரியின் முக்கியமான அம்சம் கொலு வைப்பதுதான்.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாள் கொலுவில், விதவிதமான பொம்மைகளைக் காட்சிப்படுத்தி, அம்பாளுக்கு பூஜை செய்து வருபவர்களுக்கு பிரசாதமும், தாம்பூலமும் கொடுத்து உபசரித்து மகிழ்வது மக்களின் வழக்கம். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விழாவில் புகழ் பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தலையாட்டி பொம்மைகள் முதன் முதலில் 19ஆம் நூற்றாண்டில், சரபோஜி மன்னரின் காலத்தில், தஞ்சையில் உருவாக்கப்பட்டன. காவிரி ஆற்றின் களிமண்ணால் செய்யப்படும் இப்பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. தலையாட்டி பொம்மைகள் அடிப்பகுதியில் பெரியதாகவும் எடைமிகுந்ததாகவும், மேற்புறம் குறுகலாகவும் எடை குறைவானதாகவும் உருவாக்கப்படுகின்றன. இதனால் இப்பொம்மைகளைச் சாய்த்துக் கீழே தள்ளினாலும், புவிஈர்ப்பு விசையின் செயல்பாட்டிற்கேற்ப கீழே விழாமல் மீண்டும் செங்குத்தாகவே நிற்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் துன்பங்களால் கீழே விழுந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் மீண்டும் எழுந்து விட முடியும் என்ற உயர்ந்த கருத்தை தன்னுள் வைத்துள்ளது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் என்றால் மிகையில்லை. வாழ்க்கை உன்னை எந்தளவிற்கு சோதித்தாலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் எழுந்து நிமிர்ந்து விடுவார்கள் என்பதை உணர்த்துகிறது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.

மேலும், வார்த்தைகளில் சொல்ல முடியாதவைகளைக் கூட தலையசைப்பால் உணர்த்தி விட முடியும் என்பதையும் இந்தப் பொம்மைகள் எடுத்துக் கூறுகின்றன. இப்படி வாழ்க்கை தத்துவங்களை விளக்கி கூறும் தலையாட்டி பொம்மைகள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவில் முக்கிய இடத்தை பிடிக்கும். நேற்று முதல் நவராத்திரி விழா தொடங்கியுள்ளதால் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் விற்பனை வெகு மும்முரம் அடைந்துள்ளது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக் குழு மதி விற்பனை அங்காடியில் நடன பொம்மை, பொய்க்கால் குதிரை, ராஜா ராணி போன்ற பல்வேறு வகையான தலையாட்டி பொம்மைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விற்பனையும் அதிக அளவில் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

இது குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் கூறுகையில், கடந்த ஆண்டு நவராத்திரி விழாவில் எங்களது தஞ்சை ரயிலடி அங்காடியில் மட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் 2.50 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இந்த ஆண்டு அதைவிட அதிக அளவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். பொம்மைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்குகிறோம். பொதுமக்கள் தலையாட்டி பொம்மைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்று தெரிவித்தனர்.

இதேபோல் தஞ்சையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அங்காடிகளில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. ஒட்டு மொத்தத்தில் இந்த நவராத்திரி விழாவில் அனைத்து அங்காடிகளையும் சேர்த்து தலையாட்டி பொம்மைகள் விற்பனை எண்ணிக்கை மட்டும் லட்சக்கணக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .