மயங்கி விழுந்து இறப்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி. இவரது மகனான 25 வயதுடைய நவீன்குமார் இன்னும் திருமணமாகாத நிலையில் பாலக்கோடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணி செய்து வந்தார்.

நவீன்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டு வாசலில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நவீன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வெளியான திடுக்கிடும் தகவல்கள்

இறந்த நவீன்குமாரின் கழுத்தில் கயிறு நெரித்த அடையாளம் காணப்பட்டதால் நவீன்குமாரின் பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த கோமதி தன் மகனை கொலை செய்ததாக கூறி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அவரது உறவினர்கள் கோமதியை கைது செய்ய வேண்டும் என கோரி பாலக்கோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எனவே சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோமதி மற்றும் அவரது கணவரான 36 வயதுடைய குருநாதன் ஆகிய இருவரையும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவுண்டனூர் பகுதியை சேர்ந்த கோமதிக்கும் குருநாதனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இருவரும் கோமதி வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு முன்பே கோமதிக்கு நவீன்குமாரும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர்.

பின்னர் திருமணத்திற்கு பிறகு இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. எனவே நவீன்குமார் கோமதியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று அவருடன் தனிமையில் இருந்து வந்திருக்கிறார்.

மனைவியை கண்டித்த கணவர்

ஒரு கட்டத்தில் கோமதியின் கள்ளக் காதலை அறிந்த அவரது கணவர் நவீன்குமாருடன் பேசுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். எனவே குடும்பம் பாதிக்கப்படும் என கருதி கடந்த ஒரு ஆண்டாக நவீன்குமாருடன் பழகுவதை கோமதி தவிர்த்து வந்திருக்கிறார்.

ஆனால் நவீன்குமார் கோமதியை தொடர்ந்து தன்னுடன் பழகுமாறு தொல்லை செய்து வந்திருக்கிறார். மேலும் வேலை செய்யும் இடம் வரை பின் தொடர்ந்து வந்து சென்று தன்னுடன் தான் வாழ வேண்டும் என கூறி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த கோமதியிடம் பேச நவீன்குமார் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

நீ செத்து போ - நான் நிம்மதியா இருப்பேன்

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் , கோமதி நவீன்குமாரை " நீ செத்து போ , நான் நிம்மதியா இருப்பேன் " என கத்திவிட்டு அறையில் இருந்து வெளியே வந்து வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த நவீன்குமார் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு செய்து கொண்டிருக்கிறார்.

அவரது பாரம் தாங்காமல் கயிறு அறுந்து கீழே விழுந்த சத்தம் கேட்டு கோமதி உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் பயந்து போன அவர் தனது கணவருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி அழைத்துள்ளார்.

மனைவி சொன்னதை கேட்டு வீட்டிற்கு வந்த குருநாதன் உடனடியாக வீட்டுக்கு வந்து நவீன் குமார் இங்கே இறந்து விட்டால் நாம் மாட்டி கொள்வோம் என நினைத்து , இருவரும் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நவீன்குமாரை இழுத்து சென்று அவரது வீட்டில் போட்டு விட்டு வந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், கோமதி, மற்றும் அவரது கணவர் குருநாதன் ஆகிய இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியது , போலீசாருக்கு தெரிவிக்காமல் நவீன்குமாரின் உடலை அப்புறப்படுத்தியது ஆகிய இரு வழக்குகள் பதிவு செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.