தஞ்சாவூர் தவெக நிர்வாகிகள் சந்திப்பின்போது விபத்துக்கு உள்ளானவர்களுக்கு தவெகவினர் உதவவில்லை என்று பரப்பப்படும் செய்தி உண்மையில்லை என்று தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் விஜய் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ’’கடந்த மார்ச் 4 அன்று விஜய் திருச்சியில் இருந்து செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இருசக்கர வாகன சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை இதுவரை நாங்கள் சென்று பார்க்கவில்லை என்றும் கட்சியின் சார்பிலும் நிர்வாகிகள் சார்பிலும் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் திமுக மற்றும் அதிமுக கட்சியைச் சார்ந்த நபர்கள் வலைத்தளங்கள் மூலம் பொய்யான, போலியான அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள்.

அதுகுறித்து உண்மையையும் எங்களின் செயல்பாட்டையும் ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்வது கடமை என்று எண்ணுகிறேன்.

நடந்தது என்ன?

சம்பவம் நடந்த அன்று விஜயுடன் வந்த கான்வாயில் 2 ஆம்புலன்ஸ்கள் எங்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டவை ஆகும் அதில் மருத்துவர் பாபு (சென்னை) பொறுப்பேற்று விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு காமாட்சி மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை தொடர் சிகிச்சை செய்ய உதவினார்.

தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு எங்கள் கட்சியின் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அரவிந்த் முயற்சியில் தொடர் சிகிச்சை மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது. (டாக்டர் அரவிந்த் மயக்கவியல் மருத்துவராக காமாட்சி மருத்துவமனையில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது)

நிதி உதவி

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தேவைக்கு விக்னேஷ் குடும்பத்தினரிடம் ரூ.70,000/ 2 தவணையாகவும், மற்றொரு நபர் ஹாரூன் அறுவை சிகிச்சைக்கு ரூ. 30,000 2 தவணையாகவும் அவரது குடும்பத்திடம் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் அருளால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இருவருக்கும் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் அரவிந்த் மூலமும் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மூலமும் கேட்டறிந்து பெற்றோர்களிடம் தெரிவித்து தொடர்ந்து தேவையான சிகிச்சைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வதாகவும் தெரிவித்து வந்திருக்கிறோம். தொடர்ந்து அவர்களின் தேவைக்கு உதவிகளை இன்று வரை செய்து வந்து கொண்டு இருக்கிறோம்.

இந்நிலையில் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரித்து முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் என்கிற செய்தி அறிந்தோம்.

அவதூறு பரப்பாதீர்

இந்நிலையில் அவதூறு பரப்பும் வகையில் தமிழக வெற்றி கழகம் எந்த உதவியும் செய்யவில்லை, யாரும் சென்று பார்க்கவில்லை என்பன போன்ற அவதூறு தகவல்களை இழிவான அரசியலை மலிவான அரசியலை திமுக மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதை வன்மையாக கண்டிக்கிறேன்’’ என்று விஜய்சரவணன் தெரிவித்துள்ளார்.