தஞ்சாவூர்: தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவரின் 17 வயது மகளை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்களை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம் பகுதியில், 17 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு அழுது கொண்டிருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அதிராம்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸாருக்கு தகவல் அளித்து, பட்டுக்கோட்டை பகுதிக்கு சிறுமியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த சிறுமியின் தந்தை மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருந்தார். கடன் தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சாத்தனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் (28), சிறுமியின் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசும்போது, அவரது மகள் போனை எடுத்து பேசுவது வழக்கம்.

இதில் முத்துப்பாண்டியனுக்கும் அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முத்துப்பாண்டியன் கடன் வாங்கிய சிறுமியின் தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது மகள் கூறிய நிலையில், நிறுவனத்துக்கு வந்து தகவலை தெரிவிக்குமாறு முத்துப்பாண்டியன் கூறியுள்ளார்.

இதனால் கடன் வாங்கியவர் தனது 17 வயது மகளை மன்னார்குடிக்கு அனுப்பியுள்ளார். மன்னார்குடிக்கு வந்த பெண்ணை முத்துப்பாண்டியன் தனியாக அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய அந்த சிறுமியும் முத்துப்பாண்டி அழைத்ததால் அவருடன் பைக்கில் ஏறி உள்ளார்.

அப்போது முத்து பாண்டியன் நண்பர் தவசீலன் (25) வேகமாக வந்து பைக்கில் சிறுமியின் பின்னால் அமர்ந்து கடத்தி வந்துள்ளனர். பின்னர் ராஜாமடம் அக்னிஆறு பகுதியில் அந்த சிறுமியை இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுமியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். தொடர்ந்து அந்த சிறுமி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் முத்துப்பாண்டி, தவசீலன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.