தஞ்சாவூர்: வரும் ஜுன் 15-ம் தேதி தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் ஆலோசனைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் வரவேற்றார். மகளிரணி நிர்வாகிகள் மைதிலி , வனிதா மற்றும் சேகர், மாவட்ட அவை தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில தலைவர் கே. எஸ். முகமது இப்ராஹிம் தலைமை வகித்து பேசியதாவது: வரும் ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் குறுவை சாகுபடியை உரிய காலத்தில் மேற்கொள்ள விவசாயிகள் தயாராகி விடுவார்கள். வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டுவதற்கு ஏதுவாக முதல்வர் திட்டவட்டமாக அறிவித்துள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் தூர்வாரும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் விவசாயிகள் சங்க தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்ட குழு மூலம் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் நன்றாக நடப்பதை உறுதி செய்ய கேட்டுக் கொள்கிறோம். தஞ்சையில் நம் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், டெல்டா மாவட்ட சாகுபடி பாசன வசதிக்காக வரும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. கும்பகோணத்தில் டாக்டர் கலைஞர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்த முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வது. மேலும் இதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

வரும் ஜுன் 15-ம் தேதி தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி பாதுகாப்பு மாநில மாநாட்டை நடத்துவது, அதில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய விஞ்ஞானிகளை அழைப்பது . மாநாட்டு பணிகளை முகமது இப்ராஹிம், ராஜேஷ் கண்ணன் , ஜீவானந்தம் , சசிகுமார், ஜெயக்குமார் ,அரவிந்த் ,சக்திவேல் , சிலம்பரசன் ஆகியோர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிக்கு ரூ.25 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி பணிகள் நடைபெறும் வேளையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விவசாயிகள் சங்க தலைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் கொண்டக்குழு மூலம் நேரில் சென்று ஆய்வு செய்து பணிகள் சிறப்பாக நடைப்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவராக ராஜா , தஞ்சை ஒன்றிய துணை தலைவராக சேகர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் மாநில இளைஞர் அணிசெயலாளர் ராஜேஷ் கண்ணன், மாநில துணை செயலாளர் சசிகுமார், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் சேகர் நன்றி கூறினார்.