தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரண்டாம் நாளான நேற்று 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதை ஒட்டி கடந்த மார்ச் 30ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நாளான மார்ச் 30ம் தேதி 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, நேற்று 2ம் நாளில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

இதில், திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் 3 பேரும், கும்பகோணம் தொகுதியில் 4 பேரும், பாபநாசம் தொகுதியில் 7 பேரும், திருவையாறு தொகுதியில் 2 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 4 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 2 பேரும், பேராவூரணி தொகுதியில் ஒருவரும் என மொத்தம் 5 பெண்கள் உள்பட 28 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் த.வெ.க. சார்பில் எஸ். பிரபாகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம். புரட்சிமணி, பி. வேதநாயகி, பாபநாசம் தொகுதியில் த.வெ.க. சார்பில் அசாருதீன் உதுமான் அலி, அனீஸ் பர்வீன், தஞ்சாவூர் தொகுதியில் தமிழக மக்கள் நலக் கட்சி சார்பில் எம். பாஸ்கரன், திருவையாறு தொகுதியில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா முன்னேற்றக் கழகம் சார்பில் எஸ். விஜயகுமார், ஒரத்தநாடு தொகுதியில் த.வெ.க. சார்பில் மருத்துவர் கே. ஆனந்த், கே. மோகனா ஆகியோர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாவட்டத்தில் இதுவரை திருவிடைமருதூர் (தனி) தொகுதியில் 5 பேரும், கும்பகோணம் தொகுதியில் 6 பேரும், பாபநாசம் தொகுதியில் 10 பேரும், திருவையாறு தொகுதியில் 4 பேரும், தஞ்சாவூர் தொகுதியில் 7 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 8 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 4 பேரும், பேராவூரணி தொகுதியில் 3 பேரும் என மொத்தம் 8 பெண்கள் உள்பட 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் இதுவரை பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை பாஜக வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையே இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.