தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதில் தொடர்புடைய 4 பேர் நேற்று தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2) ல் சரண் அடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (20). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி விளார் ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் சசிகுமார் தலை சிதைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. சசிகுமார் திடீரென தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதை அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சசிகுமார் உடலை பார்வையிட்டனர். இதில் அரிவாளால் சசிகுமார் தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும், அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகுமாரை கொலை செய்தது யார்? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

போலீசார் விசாரணையில் தஞ்சாவூர் விளார் சாலை தில்லை நகர் பகுதி பாரதிதாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரின் மகன் திலகன் (22). இவருக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த சக்தி (23) என்பவருக்கும் இடையில் கடந்த செப்.7ம் தேதி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திலகன், தனது நண்பர் சசிகுமாரை அழைத்துக் கொண்டு கடந்த 9ம் தேதியன்று கலைஞர் நகர் முதல் தெருவுக்கு சென்றுள்ளார்..

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில் சசிகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்தது. தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி., கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இந்திரா நகரைச் சேர்ந்த சக்தி, கோகுல், ராஜா, பிரபா, சஞ்சய் உள்பட 11 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)-ல் இந்திரா நகர் பிரபு என்பவரின் மகன் ஹரிஹரன் (எ) சக்தி (20), அவரது தம்பி கோகுல் (19), அண்ணாநகர் 10ம் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஞ்சய் (19), இபி காலனி செந்தமிழ் நகர் ராஜா என்பவரின் மகன் பிரபாகர் (20) ஆகிய 4 பேரும் நேற்று மதியம் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர். இவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.