தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர்.

பின்னர் கூட்டத்தில் விவசாயி பேசியதாவது:

கோட்டாட்சியர் நித்யா: எஸ் ஐ ஆர் பணி நடைபெற்றதால் கடந்த மாதம் விவசாயி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது பணிகள் முடிவடைந்துள்ளதால் இனி மாதந்தோறும் விவசாயிகள் கூட்டம் இது போல் நடைபெறும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கடந்த 2025- 2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அறுவை கடந்த 18ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கரும்பு விவசாயிகள் கூட்டுறவு அல்லது தனியார் வங்கியில் கடன் பெற்றால் அவர்களுக்கு சிபில் ஸ்கோர் கணக்கீடு செய்யக்கூடாது. அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே கரும்பு ஆலை இருப்பது போல் மரவள்ளிக் கிழங்கிற்கும் ஆலை அமைத்து தரவேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இடவசதி அதிக அளவில் உள்ளது. எனவே 100 ஏக்கரில் நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும். மேலும் விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாய வங்கி கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர்: இயற்கை சீற்றத்தால் இன்னல் படுகிற விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நலன் கருதி பொங்கல் தொகுப்பில் அரிசி, வெல்லம், செங்கரும்பு, வாழைப்பழம், தேங்காய் ஆகிய விவசாய விளைப்பொருட்களோடு ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும். புயல் மழை மற்றும் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை செயலி மூலம் வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு செய்வதால் கணக்கெடுப்பு பணிகள் தாமதம் ஏற்படுகிறது. நெல் வயலில் விவசாயிகளை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து விவசாயிகளுக்கு மேல் கணக்கெடுக்க இயலவில்லை.

15 கிராமத்திற்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர், ஒரு கிராமத்திற்கு ஒரு கிராம அலுவலர் எனவே கிராம நிர்வாக அலுவலர்களையும் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். திருவையாறு ஒன்றியம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கி வருகிறார்கள். மேலும் மகளிர் சுய உதவி குழு கடன்களும் வழங்குகிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் பொதுமக்களும் பெண்களும் வந்து செல்கிறார்கள். அந்த வங்கி வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் நெரிசலில் மிக சிரமம் ஏற்படுகிறது. எனவே நடுக்காவேரி மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு புதிய கட்டிடம் கட்டித் தந்து வங்கி பணிக்கு கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ்: வெண்ணாறு இரட்டை வாய்க்கால் மிகவும் மேடாக உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு தண்ணீர் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அதனை சரி செய்ய வேண்டும். பிள்ளை வாய்க்கால் இரண்டாம் கரையில் விவசாயிகள் பயன்படுத்தும் சாலை மண் சாலையாக உள்ளது. அதனை தார் சாலையாக மாற்றி தர வேண்டும். அவ்வாறு தார் சாலையாக மாற்றினால் அந்தப் பகுதியில் உள்ள 10 கிராமங்கள் பயன்பெறுவார்கள்.

பெரமூர் அறிவழகன்: கொள்முதல் செய்யும் மில்லின் ஈரப்பத அளவை உயர்த்துவதை மாநில அரசின் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது பருவமழை பாதிப்பை கணக்கெடுக்கும் பணியை விரைவாக முடித்து நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும். மின்சார வாரியத்தின் தற்போது தட்கள் முறை இணைப்பு வழங்கும் விண்ணப்பம் பெறுவதை பத்தாயிரம் இணைப்பு என்பது உயர்த்தி 25000 இணைப்பு கொடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் மின்னணு பரிவர்த்தனை ஏற்படுத்திட வேண்டும். திருவையாறு வட்டம் பெரம்மூர் கிராமத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு தளம் மற்றும் கூடுதல் அமைத்து தர வேண்டும்.

பிரகலநாதன்: வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் தலைப்பு பிள்ளை வாய்க்கால் பாசனம் ஒரத்தூர் நத்தமங்கலம் மேகலத்தூர் ஆகிய ஊர்களுக்கு பாசனம் அடைகின்றது. பாசனம் அடையும் தண்ணீர் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகமாக வரும் பொழுது வண்ணாத்தி வாய்க்காலில் உள்ள வலம்புரி வாய்க்காலில் தண்ணீர் சேருகிறது. தண்ணீர் சேரும்போது தண்ணீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே ஆற்காடு மயான சாலையில் ஓட்டம் மண்டபத்திற்கு வழியாக தெற்கு முகமாக வெண்ணாற்றில் வடியும் படி செய்து தரக்கூடிய பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வரை 35 வருடங்களாக மனு கொடுத்து வருகிறேன். இந்த பொறுப்பு வருவாய்த்துறைக்கு தான் உரிமை உண்டு என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர். எனவே தண்ணீர் வடியும் படி வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டும்.

மாதவன்: ஆம்பலாப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தப் பள்ளியில் மாணவர்கள் மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இந்த தெருநாய்கள் அந்த பள்ளியில் கூட்டம் கூட்டமாக சென்று அசுத்தம் செய்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி தொற்றுநோய் பரவாமல் இருக்க அங்கு கூட்டம் கூட்டமாக சுற்றி தெரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பருவம் தவறி பெய்த மழையில் நடவு செய்யப்பட்ட காலகட்டத்தில் பெய்த மழையில் பள்ளமாக இருந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நெல் பயிர்கள் அனைத்தும் அழுகியது. அதனை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த் துறையினர் பார்வையிடாமல் ஒரு சில பகுதிகளை மற்றும் பார்வையிட்டு சென்றுள்ளனர். எனவே அதனை கணக்கீடு செய்து அதற்கான நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். கூட்டத்தில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உணவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.