தக் லைஃப் கதை

தில்லியில் பிரபல ரியல் எஸ்டேட் தாதாவாக இருக்கிறார் ரங்கராய சக்திவேல். எதிரி கும்பலுடன் நடக்கும் மோதலில் பேப்பர் போடுபவர் இறந்து விட அவரது மகன் அமரனை எடுத்து வளர்க்கிறார். இந்த கலவரத்தில் பிரிந்த அமரனின் தங்கையை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்கும் கொடுக்கிறார். வயதாகி கிட்டதட்ட ரிடையர்மெண்ட் நோக்கி நகரும் சக்திவேல் ஒருபக்கம் மனைவி அபிராமி இன்னொரு பக்கம் பாடகி இந்திராணியுடன் ரொமான்ஸ் செய்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக சக்திவேலுக்குப் பின் அமரன் தலைமை எடுக்க அவரைப் பார்த்து லேசாக பொறாமையும் கொள்கிறார். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து அமரனை தூண்டிவிட சக்திவேலை கொல்ல முயற்சிக்கிறார் அமரன். மீண்டும் உயிர்தப்பி வரும் சக்திவேல் அமரன் உட்பட ஒவ்வொருத்தராய் பழிவாங்குவதே தக் லைஃப் படத்தின் கதை.

தனது மக்களுக்காக ஒருவன் வன்முறையை கையில் எடுப்பது நாயகன் படத்தின் கதை. அந்த வன்முறையால் தனது மனைவி , மகனை இழப்பார் சக்திவேல் நாயக்கர்.

நாயகன் vs தக் லைஃப்

நாயகன் படத்தில் தனது மக்களுக்காக சன்முறையை கையில் எடுக்கிறார் சக்திவேல். அதே வன்முறையால் உருவான பகையால் சக்திவேல் தனது மனைவி மகனின் உயிரை இழக்கிறார். தனது மகளை பிரிகிறார். இறுதியில் சுடப்படுகிறார். இத்தனையும் பார்த்த சக்திவேலின் குணாம்சங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தக் லைஃப் படத்தில் ஒரு புதிய கதையை தொடர்கிறார் மணிரத்னம்.

ஆனால் நாயகன் படத்தில் இருந்த மைக்கதை , அதில் இருந்த உணர்ச்சிகளின் பேலன்ஸ் தக் லைஃப் படத்தில் மிஸ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டுன். ஒரு பெரிய கேங்ஸ்டர் அவருக்கு அடுத்தபடியாக அதிகாரத்திற்கு வர நடக்கும் சூழ்ச்சிகள் , தந்தை மகன் செண்டிமெண்ட் , திருமணத்தை தாண்டிய காதல் உறவு என மணிரத்னமின் முந்தைய படங்களின் சாய்கள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.

ஒருபக்கம் கமல் சிம்பு இருவருக்குமான உறவு இதில் மையக்கதையாக அமைகிறது

இன்னொரு பக்கம் கமல் - த்ரிஷா , கமல் - அபிராமி இடையிலான காட்சிகள் மணிரத்னமின் தனித்துவமான எழுத்தில் அமைந்துள்ளன. ஆக்‌ஷன் எமோஷன் என முதல் பாதியில் சரியாக சென்றுகொண்டிருக்கும் படம் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ரிவெஞ்ச் படமாக மட்டுமே மாறிவிடுகிறது.

நடிப்பு

கமலின் நடிப்பு படத்தில் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் என்றே சொல்லலாம். பலமுறை பார்த்த காட்சிகள்தான் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவதொரு புதுமையை செய்து காட்சிகளை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறார். மறுபக்கம் சிம்புவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. ஆனால் அவரது கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம். அபிராமி மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரம் வழக்கமான டெம்பிளெட் பெண் கதாபாத்திரங்களுக்குள் சுருக்கப்பட்டு விட்டது. சாக்லேட் பாயாக வந்த அசோக் செல்வன் போலீஸ் அதிகாரியாக தோற்றம் முதல் நடிப்பு வரை பயங்கரமாக அப்டேட் செய்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரம் செக்க சிவந்த வானம் விஜய் சேதுபயின் கதாபாத்திரத்தை அச்சு அடித்தது போல் உள்ளது. ஐஸ்வர்யா லக்‌ஷ்மி படத்தில் ஒரு முக்கியமான ட்விஸ்டாக மட்டும் பயண்படுத்த பட்டிருக்கிறார்.