திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் மொய்த்ரா இன்னும் வெளியிடவில்லை. இந்த திருமணம், ஜெர்மனியில் நேற்று முன்தினம் (மே 3) நடந்ததாகக் கூறப்படுகிறது.

மஹுவா மொய்த்ராவுக்கு டும் டும் டும்:

நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான அரசை தனது அதிரடி பேச்சால் மிரள வைப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.

யார் இந்த பினாகி மிஸ்ரா?

கடந்த 2019ஆம் ஆண்டு, வெற்றி பெற்ற அதே கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்றார். இந்த நிலையில், இவர், பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு டென்மார்க் நாட்டை சேர்ந்த நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மஹுவா மொய்த்ரா திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹாத்ராயை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

மொய்த்ரா லஞ்சம் வாங்கிய புகாரில் அவருக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தவரே ஜெய் அனந்த் தேஹாத்ராய்தான். இருவரும் பிரிந்த நிலையில், தற்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பினாகி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.