இந்திய எலக்ட்ரிக் SUV சந்தையில் புதிய சியரா EVயை அறிமுகப்படுத்தி டாடா மோட்டார்ஸ் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே Curvv EVயுடன் மிட்-சைஸ் எலக்ட்ரிக் SUV பிரிவில் நுழைந்த டாடா, இப்போது சியரா EVயுடன் மேலும் வலுவான போட்டிக்கு தயாராகியுள்ளது. இந்த மாடலுக்கு Hyundai Creta Electric, Maruti e Vitara, Toyota Ebella, MG ZS EV, Mahindra BE 6, Vinfast VF6 போன்ற கார்கள் போட்டியாளர்கள். இருப்பினும், டாடா சியரா EVயில் சில சிறப்பு அம்சங்கள் இருப்பது இதன் முக்கிய பலமாக கூறலாம்.

சிறப்பம்சங்கள்

இந்த SUVயில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் டிரிபிள் ஸ்கிரீன் செட்டப். மற்ற போட்டியாளர் கார்களில் பொதுவாக இரண்டு ஸ்கிரீன்கள் மட்டுமே இருக்கும் நிலையில், சியரா EVயில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் 10.25 இன்ச் சிறப்பு பயணிகள் ஸ்கிரீனும் வழங்கப்பட்டுள்ளது. முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணி தனியாக பொழுதுபோக்கை அனுபவிக்கும் வாய்ப்பு இதில் உள்ளது. மேலும், Dolby Atmos சவுண்ட் டெக்னாலஜியுடன் Apple CarPlayயில் இந்த சவுண்ட் அனுபவத்தை வழங்கும் இந்தியாவின் முதல் கார் இதுதான் என்று டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

மற்றொரு சிறப்பம்சம் 540-டிகிரி கேமரா அமைப்பு ஆகும். தற்போது பல கார்களில் 360-டிகிரி கேமரா இருக்கும் நிலையில், சியரா EV-யில் காரின் அடிப்பகுதியைக் காட்டும் வசதியும் உள்ளது. குறிப்பாக, பள்ளங்கள் நிறைந்த சாலைகள், பாறைகள் நிறைந்த சாலைகள் அல்லது கரடுமுரடான பாதைகளில் ஓட்டும்போது சக்கரங்களின் நிலையைத் தெளிவாகக் கண்டறிய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அம்சம், வாகனம் ஓட்டுவதை மிகவும் பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் ஆக்குகிறது.

டாடா சியரா EV-யின் மற்றொரு முக்கிய ஈர்ப்பு அதன் AWD அமைப்பு ஆகும். முன்புறம் மற்றும் பின்புறத்தில் தனித்தனி மின் மோட்டார்கள் இருப்பதால், இந்த SUV ஆல்-வீல் டிரைவ் திறனைக் கொண்டுள்ளது. 75kWh பேட்டரி பேக்குடன் வரும் இந்த வேரியண்ட்டில், முன்புற மோட்டார் 140 hp சக்தியையும், பின்புற மோட்டார் 209 hp சக்தியையும் உற்பத்தி செய்கிறது. மொத்தமாக 504 Nm டார்க் வழங்கும் இந்த கார், வெறும் 5.8 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த பிரிவில் இதுவே அதிவேகமான SUV ஆக இருக்கும் நிலையில், மஹிந்திரா BE 6 இதே வேகத்தை அடைய 6.7 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

பொழுதுபோக்கை மேலும் சுவாரஸ்யமாக்க, டாடா நிறுவனம் ஏர்கன்சோல் சப்போர்ட் வழங்கியுள்ளது. இது இன்ஃபோடெயின்மென்ட் திரையை ஒரு மல்டிபிளேயர் கேமிங் கன்சோலாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களை கேம் கன்ட்ரோலர்களாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக சார்ஜ் செய்யும் நிறுத்தங்களின் போது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடும் வாய்ப்பு ஒரு சிறப்பு ஈர்ப்பாக மாறியுள்ளது.

எக்ஸ்-ஷோரூம் -ஆன்-ரோடு விலை

சென்னையில் டாடா சியரா EV-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 18.79 லட்சத்தில் தொடங்கி ரூ. 25.99 லட்சம் வரை செல்கிறது. இதன் ஆன்-ரோடு விலை ரூ. 19.93 லட்சம் முதல் ரூ. 28.18 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி வகையைப் பொறுத்து, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 535 கி.மீ முதல் 665 கி.மீ வரை பயணிக்க முடியும் என நிறுவனம் அறிவித்துள்ளது. உயர் ரக Empowered A AWD வேரியண்டில் டிரிபிள் ஸ்கிரீன்கள், 540-டிகிரி கேமரா, AWD மற்றும் ஏர்கன்சோல் போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.

சிறப்பம்சங்கள், செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பயண வரம்பு ஆகியவற்றின் அடிப்படையில், டாடா சியரா EV அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. விலை சற்றே அதிகமாக இருந்தாலும், புதுமையான அம்சங்களைத் தேடும் நுகர்வோருக்கு இது ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக அமையும் எனத் தெரிகிறது.