<p>உலக சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்கள். இந்த வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 27 படங்கள் உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இயான் பிளெம்மிங் என்ற நாவலாசிரியர் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். அது 1953ஆம் ஆண்டு ஆகும். ரகசிய உளவாளி ஆன ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தி தனித்துவமாக காட்டுவதே 007 என்ற குறியீடு தான். </p>
<p>007 குறியீடுக்கு பின் ஒரு வரலாறு இருக்கிறது என்று சாென்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தான். ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து இயான் பிளெம்மிங் 2 சிறு கதை, 12 நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 12 நாவல்களுமே பெரிய லாபத்தை சம்பாதித்து கொடுத்தன. மக்களின் வரவேற்பை பெற்று அதிக பிரதிகள் விற்று தீர்ந்தன. மக்களின் ஆர்வத்தை தூண்ட வைத்த நாவல்களின் ஹீரோவாக ஜொலித்தார் ஜேம்ஸ் பாண்ட். அதன் பின்னர் இந்த கதாப்பாத்திரத்தை வைத்து முதல் முறையாக 1962ஆம் ஆண்டு டாக்டர் நோ என்ற படம் உருவானது. முதல் ஜேம்ஸ் பாண்டாக சீன் கானரி நடித்து பிரபலம் அடைந்தார். </p>
<p>அதில் ஜேம்ஸ் பாண்ட் குறியீடாக 007 இடம்பிடித்தது. 7 என்ற எண் மட்டும் துப்பாக்கி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்க்க 7 ஆகவும் துப்பாக்கியாகவும் குறியீடை வடிவமைத்தவர் ஜோ கேராப். 007 உலகளவில் புகழ் பெறத் தொடங்கியது. இதை வைத்து பலரும் வேறுவித குறியீடுகளையும் வடிவமைக்க தொடங்கினார்கள். கிராபிக் டிசைனரான ஜோ கேராப் 300க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களின் போஸ்டர்களை வடிவமைத்துள்ளார். 1982ஆம் ஆண்டு வெளியான காந்தி படத்தின் போஸ்டரையும் இவர்தான் வடிவமைத்தார். </p>
<p>அதேபான்று உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களான வுடி ஆலன், ரிச்சர்டு அட்டன்பரோ, மார்ட்டின் ஸ்கார்செசி ஆகியோரின் படங்களுக்கும் போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், 103 வயது நிறைந்த ஜோ கேராப் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இன்னும் சில நாட்களில் 104ஆவது பிறந்தநாளை காெண்டாட இருந்தவர் மறைந்த செய்தி சோகத்தை வரவழைத்துள்ளது. இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் வரும் 007 வடிவமைப்புக்காக அவர் 300 டாலர் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது. </p>