சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 ஆம் நூற்றாண்டு சோழ பாண்டியர் பெயர் பொறித்த வாணதிராயர் ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சார்ந்த உமேஷ் மற்றும் செல்வம் ஆகியோர் சிவகங்கை தொல் நடைக் குழுவிற்கு கல்வெட்டு ஒன்று இருப்பதாக கொடுத்த தகவலின்படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர்.கா காளிராசா செயலர், இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன், பேராசிரியர் வேலாயுத ராஜா ஆகியோர் அவ்விடத்தில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து கா.காளிராசா நம்மிடம் தெரிவிக்கையில்..,” சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்து உள்ள சிங்கம்புணரி ஒன்றியம் மு.சூரக்குடி கோவில்பட்டியில் சோழந்திக் கோட்டை என்று மக்களால் வழங்கப்படும் இடத்தில் முனீஸ்வர சாமியாக வணங்கப்படும் பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இப்பகுதியில் பெண்கள் செல்வதை தவிர்க்கின்றனர்.

கல்வெட்டு.

கல்வெட்டு 14,15ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது, கல்வெட்டில் ஆறு வரிகள் இடம்பெற்றுள்ளன, இரண்டரை அடி உயரமும் ஒன்றை அடி அகலம் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. நல்ல வேலைப்பாட்டுடன் சாசனம் எழுதும் அமைப்பில் மேலே இரண்டு வெண்சாமரங்களும் பக்கவாட்டில் குத்து விளக்கும், அடிப்பகுதியில் பூரண கும்பமும் காட்டப்பட்டுள்ளன.

கல்வெட்டுச் செய்தி.

ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு தொடங்கும் கல்வெட்டு கேரள சிங்க வளநாட்டில் சோழ பாண்டியர் நிலைவித்த பாடி காவல் பாதுகாப்பை பின்னாளிலும் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்த நாயனர் மாவலி வாணதி ராயர் தொடர்ந்து செயல்படுத்தியதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. வாணதி ராயர் என்று எழுதப்பட்ட இடத்தில் தி என்ற சொல் இடம்பெறாமல் வாணராயர் என்றே அமைந்துள்ளது.

சோழ பாண்டியர்.

இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் காலத்தில் சோழர்கள் பரந்து விரிந்த பகுதியை ஆட்சி செலுத்தி வந்தனர். அதில் பாண்டிய நாட்டில் பெரும்பகுதியை சோழர்களே ஆட்சி செய்தனர். பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திரசோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் இராஜேந்திரன் மதுரையை தலைநகராகக் கொண்டு சோழ பாண்டியர் எனும் பெயரில் ஆட்சி செலுத்தி வந்தான் இக்கல்வெட்டில் சோழ பாண்டியர் என்ற சொல் இடம் பெறுகிறது இக்காலத்தில் மதுரை இராஜராஜ மண்டலம் என்றும் திருப்பத்தூர் பகுதி கேரள சிங்க வளநாடு என்றும் அழைக்கப்பட்டது.

மாவலி வாணதிராயர்.

மாவலி சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களை இவர்கள் மாவலி வாணதிராயர் என அழைத்துக் கொண்டனர், பல பேரரசர்களுக்கு கீழ் சிற்றரசர்களாகவும் அரசியல் அலுவலர்களாகவும் விளங்கினர், பிற்காலப் பாண்டிய அரசர்களிடம் அரசு அலுவலராக இருந்த இவர்கள். மதுரைப் பகுதியில் இசுலாமியர் ஆட்சிக்குப் பிறகு மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் விருதுநகர் ஆகிய பகுதிகளில் விஜயநகர அரசுக்கு கீழ்ப்படிந்து தனியாக அரசு நடத்தி உள்ளனர்.

ஆசிரியம்.

ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு மற்றும் ஆதரவை குறிக்கும். பொதுவாக அப்பகுதியை ஆள்பவர்கள் பாடிக் காவல் ஏற்படுத்தி ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தான தர்மத்தைக் காத்தல், மற்றும் ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இவ்வகை ஆச்சரியம் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டு உள்ள ஊரான கோவில்பட்டி மக்கள் மிகுந்த பய பக்தி உடையவராக காணப்படுகின்றனர். இங்குள்ள ஆண்கள் அனைவரும் காது வளர்ப்பதை இன்றும் தங்களது வழக்கமாக வைத்துள்ளனர். கல்வெட்டு உள்ள வயல் பகுதிக்கு காலில் செருப்பு அணிந்து செல்வதை அனைவரும் தவிர்க்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது மேலும்

அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு ஒன்றை அடையாளப்படுத்தியதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்று தெரிவித்தார்.