தேசிய சுகாதார இயக்கத்தின் மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தொடங்கியது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை துவக்கி வைத்தனர்.

பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையம், மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் ஆகியவற்றை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஹீமோபீலியா செயலியின் பயன்பாட்டை தொடங்கி வைத்து மாநில அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் விரிவாக்கம் குறித்த குறும்படத்தையும் அமைச்சர்கள் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், அனைத்து துறைகளிலும் முதல்வர் சிறப்பான நிர்வாகத்தை நடத்தி வருகிறார். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத்தை தனது இரண்டு கண்கள் என்று சொல்லி அதற்கேற்ப முதல்வர் நிதியை ஒதுக்கி வருகிறார். 4 ஆண்டுகளில் உலக நாடுகளே வியந்து பாராட்டும் வகையில் தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு துறை செயல்படுகிறது. முதல்வரின் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், முதல்வர் மருந்தகம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலக அளவில் ஐ.நா.மன்றமே பாராட்டும் அளவிற்கு இந்த துறை உள்ளது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஹீமோபீலியா செயலி மூலம் ஓராயிரம் பேர் மட்டுமே பயன் பெறுவார்கள். இது ஓட்டுக்காக அல்ல; ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுக்கானது. தமிழ்நாட்டில் 25 வயதுக்குட்பட்டோர் இரண்டாயிரத்திற்கும் குறைவாகவே ஹீமோபீலியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீமோபீலியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கும் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. உலகம் முழுவதும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் ஊக்கப்படுத்தபட்டு வருகிறது. கருத்தரித்தல் மற்றும் குழந்தை பேறுகளில் குறைபாடு இருப்பது உண்மை. தனியார் செயற்கை கருத்தரித்தல் மையத்தில் லட்ச கணக்கில் பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இலவசமாகவே அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் துவங்கப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து தற்போது சேலத்தில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த மாநாடு 100 சதவீதம் வெற்றிதான். ஆனால் சிலர் உரிய நேரத்திற்கு வரவில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உரிய நேரத்திற்கு செல்வது என்பதும் தலைமை பண்புதான். அதேபோல் நோலைநோக்கு பார்வை, நேர்மை, தெளிவான தொடர்புத்திறனும் தலைமை பண்புக்கு தேவை. 4 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருதுகளை இந்த துறை பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்டத்தில் 41 லட்சம் இளைஞர்கள் பல்வேறு திறன்களை பெற்று வாழ்க்கை பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டம் போல மருத்துவத்துறையிலும் 10 க்கும் மேற்பட்ட சிறப்பு திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறப்பு திட்டங்கள் மூலம் மருத்துவத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் எதிர்காலத்தில் பெருமை கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவ சேவை பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் அனைத்து நிலைகளிலும் பயன்பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை தரப்படுவதால் பொதுமக்கள் நம்பிக்கை வைத்து அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதுவரை 17 எம்‌.ஆர்‌.ஐ ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது விரைவில் தர்மபுரியில் திறந்து வைக்கப்பட உள்ளது என்றார்.

24 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்வுதான். ஒரு சிலர் இது பற்றி பேசி பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு தெளிவான விளக்கம் தரப்பட்டிருக்கிறது இன்னும் பத்து மருத்துவக் கல்லூரியில் மட்டும் விளக்கம் தர வேண்டும் விரைவில் 10 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டு விடும் என்று கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற கேள்விக்கு, எப்போதும் இல்லாத அளவு 2 ஆயிரத்து 462 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நேர்மையான முறையில் பணி வழங்கப்பட்டு அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். காலி இடம் எது என பட்டியல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நீட் தேர்வு குறித்த கேள்விக்கு, நடந்து முடிந்த நீட் தேர்வில் பெண்களின் கழுத்தில் இருந்து தாலியை கழற்ற வைத்து தேர்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கணவனே மனைவியின் தாலியே கழற்றி வைத்துக் கொண்டு தேர்வு அனுப்பிய நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. இதனால் தான் நீட் விலக்கில் உறுதியாக நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார். ‌