விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு, இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நேற்று ( ஞாயிற்றுக் கிழமை ) நடைபெற்றது.

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் , திருவான்மியூர் பல்கலை நகர் , காசிமேடு மீன்பிடி துறைமுகம் , திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நம்பர் பிளேட் இல்லாத வாகனம்

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரி சிக்னல் அருகே வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நித்திய உமா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு வாகனத்தை மடக்கிய போது அதில் மூன்று இளைஞர்கள் இருந்தனர். நம்பர் பிளேட் இல்லாத வாகனம் என்பதால் போலீசார் ஆவணங்களை கேட்ட போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

பெண் போலீசாரிடம் ஆபாச செய்கை

இதனையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து பெயர் முகவரி கேட்ட போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் பெண் போக்குவரத்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆபாச செய்கை காண்பித்துள்ளார். மேலும் அவரிடம் வந்த மற்றொருவர் தான் வழக்கறிஞர் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசார் அவருக்கு டிடி சோதனை செய்த போது அவர் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி சாபம் விட்டு இருசக்கர வாகனத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

தொடர்ந்து வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து மது போதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது குடிபோதை ஆசாமி போலீசாரை திட்டும் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.