9 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்

சென்னை தரமணியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியும் , அவரது தாயாரும் கடந்த 11 - ம் தேதி வேளச்சேரியில் இருந்து தரமணி நோக்கி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் வைத்து ஒரு வாலிபர் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். பேருந்தை விட்டு இறங்கிய பின் தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இந்நிலையில், அதே நிறுத்தத்தில் அந்த வாலிபர் நின்றுள்ளார். உடனே தாய் பொது மக்கள் உதவியுடன் அவரை பிடித்து கிண்டி மகளிர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் தரமணியை சேர்ந்த ஜமால் ( வயது 26 ) என தெரிய வந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

காணாமல் போன பைக் OLX - ல் விற்பனைக்கு வந்ததால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர்

சென்னை மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் உள்ள மருந்து கடையில் பணி புரிபவர் விக்னேஷ் ( வயது 23 ) இவர் கடந்த மாதம் 12 - ம் தேதி தன் இருசக்கர வாகனத்தை காமராஜ் தெருவில் நிறுத்தியுள்ளார். இரவில் பணி முடிந்து பார்த்த போது , ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததை அடுத்து , தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 14 - ம் தேதி, மொபைல் போனில் , ஓ.எல்.எக்ஸ்., எனும் 'ஆன்லைன்' விற்பனை தளத்தை விக்னேஷ் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் காணாமல் போன அவருடைய வாகனம் விற்பனைக்கு உள்ளது என்றும் , அதன் மதிப்பு 50,000 ரூபாய் என்றும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டனர். எதிர்முனையில் பேசிய நபரிடம், அந்த வாகனத்தை வாங்குவது போல நைசாக பேசி , பெருங்களத்துாருக்கு வரவைத்துள்ளனர். வந்த இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்ததில் , பெருங்களத்துாரைச் சேர்ந்த சாகர் ( வயது 21 ) மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஆதித்யா ( வயது 23 ) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அபராதம் விதித்ததால் வட்டார போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வடமாநில ஓட்டுனர்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் , வாகன சோதனை சாவடி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சந்திரன் ( வயது 50 ) வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாதது தெரிய வந்தது. இதனால் லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த உ.பி யை சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது அப்துல் சாகிப் ( வயது 22 ) லாரியில் இருந்து கீழே இறங்கி ஆய்வாளர் சந்திரனை தாக்கினார். அங்கிருந்தவர்கள் முகமது அப்துல் சாகிப்பை பிடித்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.