துரத்தி சென்று பிடித்த காவல் துறையினர்

சென்னை D-4 ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் ஜாம்பஜார் புலிபோன் பஜார் தெருவில் கண்காணித்தபோது , அங்கு நின்றிருந்த 2 நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடவே, காவல் குழுவினர் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை செய்தபோது , அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து D-4 ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த திருவல்லிக்கேனி பக்கீர் சாகிப் தெரு பகுதியை சேர்ந்த கரிமுல்லா ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து Tydol மற்றும் Nitrazepam ஆகிய உடல்வலி நிவாரண மாத்திரைகள் 45 எண்ணிக்கைகள் மற்றும் ஒரு Samsung Galaxy எலக்ட்ரானிக் Tab ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கரிமுல்லா மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு , 2 போதைப் பொருள் வழக்குகள், திருட்டு உட்பட சுமார் 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கரிமுல்லா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் , மேற்படி வழக்கில் தப்பியோடிய மற்றொரு நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி பணம் பறித்த கும்பல்

சென்னை ஆதம்பாக்கம் 5வது தெரு, பெரியார் நகரில் வசித்து வரும் அருண்குமார் ( வயது 23 ) என்பவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். அருண்குமார் கடந்த 02.05.2025 அன்று மாலை பால் பாக்கெட் வாங்கி கொண்டு ஆதம்பாக்கம் , நேதாஜி ரோடு மற்றும் பெரியார் நகர் 4வது தெரு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது , எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அருண்குமாரை வழிமறித்து அவதூறாக பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அருண்குமார் பணம் தர மறுக்கவே , ஆத்திரமடைந்த 3 நபர்களும் சேர்ந்து கல்லால் தாக்கி விட்டு அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இரத்தக் காயமடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் , இச்சம்பவம் குறித்து S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரி பவானி நகர் 9 வது தெரு பகுதியை சேர்ந்த தனுஷ் ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட தனுஷ் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி என சுமார் 14 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.