சென்னையில் அதிர்ச்சி !! ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஊழியர்

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்த காரணத்தினால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஸ்கேன் எடுக்கும் போது அப்பெண்ணிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது குறித்து வீட்டிற்குச் சென்று தனது கணவரிடம் தெரிவித்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ராஜமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , நாகர் கோவில் மாவட்டத்தை சேர்ந்த ஜில்கவின் ( வயது 28 ) என்ற நபர் சென்னையில் தங்கி தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்ததும் , இவர் ஸ்கேன் எடுக்க வந்த அப்பெண்ணிடம் பாலியல் அத்து மீறியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் ஜில்கவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தள்ளுவண்டி டிபன் கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் ( வயது 50 ) என்பவர் இராஜமங்கலம் மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 4 ம் தேதி இரவு கடையில் வியாபாரம் முடித்து வீட்டிற்கு கிளம்பும் போது அவரது கடைக்கு வந்த தெரிந்த நபர்களான ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் விஜயிடம் பணம் கொடு என மிரட்டினர். அதற்கு விஜய் தன்னிடம் பணம் இல்லை என கூறிய போது, 2 நபர்களும் விஜயை கையால் தாக்கி, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1,300 பணம் மற்றும் அருகிலிருந்த அவரது செல்போனை எடுத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து விஜய் இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 27 ) மற்றும் பாஸ்கர் ( வயது 33 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், ஜெயக்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி , திருட்டு உள்ளிட்ட 8 குற்ற வழக்குகளும் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.