மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை (அக்.10) சென்னையில் நடைபெறும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தி சென்னை வருகை

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நாளை பிற்பகல் (அக்.10) சென்னை தீவுத் திடலில் நடைபெறும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ’மாணவர்களின் குரல்’ என்ற தலைப்பில் மாநிலங்கள்தோறும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, நாளை சென்னையில் தமிழக மாணவர்களை சந்திக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.

முந்தைய வருகை

இதற்கு முன்னதாக மாமல்லபுரம் அருகே நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 31ஆம் தேதி ராகுல் காந்தி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார். அதன்பின், சுமார் 1 மாதக் காலத்திற்கு பிறகு அவர் நாளை (அக்.10) சென்னை வருகிறார்.

ராகுல் - விஜய் சந்திப்பு நடைபெறுமா?

கடந்த முறை சென்னை வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜயை சந்திக்காத நிலையில் அரசியல் வட்டாரங்களில் அது பேசு பொருளானது. ஆகையால், இம்முறையாவது முதலமைச்சர் விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் வேட்பாளர் தங்கள் தலைவர் தான் எனக் இருக்கட்சியினரும் சமீப காலங்களில் மாறி மாறி கூவி வருவதால் அவர்களது கூட்டணி பிளவு ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எதிர்க்கட்சியினர் இடையே ஏற்பட்டது. இத்தகைய சூழலில், ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் சந்தித்துக் கொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கொஞ்ச நாளில் கசந்த உறவு

சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அதன் பின் தவெகவுடன் கைக்கோர்த்து 2 அமைச்சர் பதவிகளையும் தன்வசப்படுத்தியது. இதனால், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மீது திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பல விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால், அது எதையும் கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி தவெகவிற்கும், முதலமைச்சர் விஜய்க்கும் தனது முழு ஆதரவை அளித்தார். அதுமட்டுமின்றி முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ராகுல் காந்தி, அவரது அருகில் புன்னகை மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தது காங்கிரஸ் மற்றும் தவெக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தவெக அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தொடங்கியதன் காரணமாக இந்த உறவில் விரிசல் விட தொடங்கியது.

கடைசியாக சந்தித்தது எப்போது?

இறுதியாக இருவரும் கடந்த ஜூன் 10 ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் சந்தித்து பேசினர். அதன்பின், இருவருக்கும் இடையே எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.