சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களால் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு, பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாக உருவெடுத்து வருகின்றன. ஆனால் இந்த பகுதியை இணைக்கும் வகையில், ரயில் வழித்தடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பேருந்து மூலமாக இந்த பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் ரயில் போக்குவரத்து வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்து அறிவிப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பிறகும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொழிற்சாலையில் வேலை செய்யும் பயணிகள் மற்றும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரயில் போக்குவரத்துக்காக கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதூர் - ஆவடி வழித்தடத்தில் 58 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து சாத்தியக்கூறு அறிக்கை ஏற்கனவே தயார் செய்யப்பட்டது.

விரிவான திட்ட அறிக்கை தயார்

ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி வழித்தடம் அமைப்பதற்கு தற்போது விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் கம்பெனி நிறைவடைந்துள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையில் மொத்தம் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கையில் தேவையான நிலம், அமைய உள்ள ரயில் நிலையங்கள், எவ்வளவு பயணிகள் பயணிப்பார்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை புறநகரில் புதிய ரயில் பாதை அமைக்க எவ்வளவு செலவாகும் ?

இந்த ரயில் பாதை அமைப்பதற்கு தனியார் இடம் இருந்து 141 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மொத்தம் இந்த ரயில் பாதை அமைப்பதற்கு 229 ஏக்கர் நிலம் தேவைப்படும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்து இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் இந்த திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 43 லட்சம் பயணிகள் பயணிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை அமைப்பதற்கு மட்டும் 945 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் முடிக்க இலக்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைய உள்ள ரயில் நிலையங்கள் என்னென்ன ?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி, நாட்டரசன் பேட்டை, ஒரகடம், வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து இருகங்காடு கோட்டை வரை ஒரு ரயில் நிலையம் அமைய உள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தண்டலம், திருமழிசை, வயலாநல்லூர் மற்றும் ஆவடி வரை ரயில்வே நிலையங்கள் அமைய உள்ளன.