தர்பூசணி ஜூஸ் கிளாஸ்சில் உயிருடன் பூரான்

சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் ( வயது 27 ) தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வேலை சம்பந்தமாக சைதாப்பேட்டை சென்ற போது வழியில் ராமாபுரத்தில் உள்ள "கட்டன் சேட்டா" என்ற டீக்கடையில் தர்பூசணி ஜூஸ் ஆர்டர் செய்துள்ளார். அப்போது அவருக்கு தர்பூசணி ஜூஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுவதுமாக குடித்த பார்த்திபன் அவரது ஜூஸ் கப்பை பார்த்த போது அடியில் உயிருடன் பூரான் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உணவு பாதுகாப்பு துறைக்கு புகார்

இது குறித்து ஜூஸ் கடை ஊழியரிடம் கேட்ட போது அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பார்த்திபன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததோடு , ஆன்லைன் வாயிலாக புகாரும் அளித்துள்ளார்.

மேலும் ஜூஸ் குடித்து உடனடியாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

ஜூஸ் கடையில் வாடிக்கையாளர் குடித்த ஜூஸில் உயிருடன் பூரான் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.